வாழைக்காய் விற்பனை மையம் அமையுமா?
மோகனூரில் வாழைக்காய் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மோகனூர்
வாழை பயிர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் வாழை பயிர் செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் வாழைத்தார்களில் குறிப்பிட்ட ஒருபகுதி ஒருவந்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் புதன்கிழமை தோறும் நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் ஏலம் விடப்படுகிறது.
இதில் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் மற்றும் மோகனூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களில் விளையும் வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர். நாமக்கல், சேலம், வியாபாரிகள் வாழைத்தாரை வாங்கி செல்கின்றனர். இந்த வாழைத்தார்கள் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும், மும்பை உள்பட வெளி மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பல நேரங்களில் போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
விற்பனை மையம்
இதுகுறித்து தமிழ்நாடு வாழை பயிரிடுவோர் பெடரேசன் பொதுச்செயலாளர் அஜீத்தன் கூறியதாவது:-
வாழையில் 300 ரகங்களுக்கு மேல் உள்ளது. இதில் பூவன், பச்சை நாடன், ரஸ்தாளி, கற்பூரவல்லி உள்ளிட்ட 12 ரகங்கள் மட்டும் அதிக அளவில் நமது பகுதிகளில் பயிரிடப்படுகிறது. வாழைப்பழங்களை குலையாக விற்பனை செய்யாமல், சீப், சீப்பாக அறுத்து விற்பனை செய்தால், சேதாரம் இல்லாமலும், சுகாதாரமாகவும் பொது மக்களுக்கு கிடைக்கும்.
தற்போது பெரிய நகரங்களில் வாழைக்காய்களை ஒரே இடத்தில் பழுக்க வைத்து விற்பனை செய்யும் வாழைக்காய் விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக இவை நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமே உள்ளது. அதை கிராம பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும். குறிப்பாக மோகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் வாழை பயிர் செய்யப்பட்டு வருவதால், இங்கு வாழைக்காய் விற்பனை மையம் அமைத்தால் விவசாயிகளுக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும். வாழைக்காயை குளிர்பதன கிடங்கில் தான் பழுக்க வைக்க வேண்டும். ஆனால் வியாபாரிகள் கார்பைடு கல் மற்றும் எத்தனால் மூலம் பழுக்க வைக்கும் நடைமுறையை கையாளுவதால் பழத்தை சாப்பிடும் பொதுமக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகின்றனர். சிப்பம் கட்டும் பணிக்கு வேளாண்மை துறை மூலம் மானியம் வழங்கப்படுகிறது. அதை அனைத்து விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நஷ்டஈடு
விவசாயி செல்லப்பன் (வயது 70) கூறியதாவது:-
வாழைகளை பூஞ்சான் நோய், அஸ்வினி வெட்டுக்கிளி, வைரஸ் நோய் போன்ற நோய்கள் அதிக அளவில் தாக்குகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. சில நேரங்களில் தண்ணீர் இல்லாமலும் விவசாயம் பொய்த்து போகின்றது. ஆனால் விவசாய கடன் வழங்கும் வங்கிகள் அந்த பகுதியில் வாழை மற்றும் எந்த பயிராக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக சேதமானால் மட்டுமே இழப்பீட்டு தொகை தர முடியும் என கூறுகின்றார்கள். உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.