கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மேற்கூரையுடன் வாகன காப்பகம் அமைக்கப்படுமா?
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மழை, வெயிலால் பழுதாகும் மோட்டார் சைக்கிள்களை பாதுகாக்க மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் மழை, வெயிலால் பழுதாகும் மோட்டார் சைக்கிள்களை பாதுகாக்க மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி
கும்பகோணத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியில் விபத்து மற்றும் அவசர கிசிச்சை பிரிவு, 24 மணி நேர தாய்சேய் நலபிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, எலும்பு முறிவு பிரிவு, கண், பல், பால்வினை நோய் பிரிவு, ரத்தவங்கி, தீப்புண் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்த ஆஸ்பத்திரியில் நாகை, திருவாரூர், அரியலுார், ஜெயங்கொண்டம், கடலூர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் இருந்து சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இருந்து வருகின்றனா்.
இந்த ஆஸ்பத்திரியிலுள்ள உள்நோயாளிகளுக்கு காலை மதியம், இரவு நேரங்களில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அங்கு வெளிநோயாளியாக சிகிச்சை பெறவும், சிகிச்சை பெறுபவர்களை பார்ப்பதற்கும் உறவினர்கள் மோட்டார் சைக்கிள்களில் வருகின்றனர்.
பழுதாகும் மோட்டார் சைக்கிள்கள்
இந்த அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார்சைக்கிள்கள் நிறுத்த காப்பகம் வசதி இல்லை. இதனால் திறந்த வெளியிலும், மரத்தின் நிழலிலும் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள் பழுதடைந்து வருகின்றன. இந்த மோட்டார் சைக்கிள்களை சில மர்மநபர்கள் திருடி சென்று விடுகின்றனர். இதனால் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு செல்வதற்கே பலர் அச்சப்படுகின்றனர்.மோட்டார் சைக்கிளை குறி வைத்து திருடி செல்பவர்கள் கும்பலாகவே செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அரசு ஆஸ்பத்திரிக்கு சாதாரண மக்களே வருகின்றனர். இங்கு வாகனங்களை நிறுத்த போதிய இடம் ஏற்படுத்தி கொடுக்கவில்லை. இதனால் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்லும் நிலை உள்ளது.
வாகன காப்பகம் அமைக்க வேண்டும்
வாகனங்களை நிறுத்திவிட்டு உடனே வரும் நிலை இருந்தால் எங்கள் வாகனம் அதே இடத்தில் நிற்கும். நீண்ட நேரம் அல்லது 1 நாளுக்கு மேல் ஆகிவிட்டால் திரும்பி வந்து பார்த்தால் மோட்டார் சைக்கிள் அங்கு நிற்பது கேள்வி குறிதான். சிகிச்சை பெறும் உறவினர்களை பார்க்க வேதனையுடன் வருபவர்களின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது மேலும் வேதனையை ஏற்படுத்துகிறது.மோட்டார் சைக்கிள்கள் நீண்ட நாட்களாக வெயிலில் நிறுத்தப்படுவதால் அதன் நிறங்கள் மாறுகிறது. என்ஜின் ஆயில் இருகி என்ஜின் பழுதாக வாய்ப்பு உள்ளது. மழையில் வாகனங்கள் நனைவதால் உதிரி பாகங்கள் துருப்பிடித்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.