மின்மீட்டர் தட்டுப்பாடுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா?
மின்மீட்டர் தட்டுப்பாடுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா? என நாகை மாவட்ட நுகர்வோர் எதிர்பார்த்துள்ளனர்.
மின்மீட்டர் தட்டுப்பாடுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா? என நாகை மாவட்ட நுகர்வோர் எதிர்பார்த்துள்ளனர்.
மின் மீட்டர்
மனிதர்களுக்கு சுவாசிக்க காற்று எப்படி முக்கியமோ அது போல மின்சாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனாலேயே மின்வாரியத்தை அரசாங்கம் எடுத்து நடத்தி வருகிறது.
ஒரு வீட்டின் மின் இணைப்புக்கு மின் மீட்டர் அவசியம். அப்போதுதான் அந்த வீட்டில் எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது தெரிய வரும். அதற்கேற்ப அந்த வீட்டிற்கான மின் கட்டணமும் நிர்ணயிக்கப்படும்.
தட்டுப்பாடு
ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மின் மீட்டர் தட்டுப்பாடு நிலவுகிறது.அதேபோல நாகை மாவட்டத்திலும் மின் மீட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் மின் மீட்டர் கிடைக்காததால் வேதனையில் உள்ளனர்.
புது மீட்டர் மட்டுமல்ல. பழுதான மின் மீட்டர்களை மாற்றவும்கூட மின் மீட்டர்கள் வழங்கப்படாமல் உள்ளது. மின் மீட்டர் இல்லாமல் புதிய வீடுகளுக்கு மின் இணைப்புகள் கொடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனடியாக மின் மீட்டர் கேட்டு விண்ணப்பித்தவர்களை காக்க வைக்காமல் உடனடியாக வழங்க வேண்டும் என்று நுகர்வோர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உடனடியாக வழங்கப்படும்
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது:-நாகை மாவட்டத்தில் புதிதாக மின் மீட்டருக்கு 988 பேரும், பழுதானவை மின் மீட்டரை மாற்ற 761 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மின்மீட்டர்களுக்கான தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். தற்போது நாகை மாவட்டத்திற்கு வினியோகம் செய்வதற்கான மின் மீட்டர்கள் வந்துள்ளது. இதனை மத்திய பண்டக சாலையில் இருப்பு வைத்துள்ளோம். மின் மீட்டர்கள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வினியோகித்து வருகிறோம். யாரேனும் விடுபட்டிருந்தால் மின்வாரிய அலுவலகத்தில் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு உடனடியாக மின்மீட்டர் வழங்கப்படும் என்றார்.