கூடலூரில் உள் அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?
விளையாட மனம் இருக்கு... ஆனால், மைதானம் இல்லை... கூடலூரில் உள் அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? என இளைஞர்கள், வீரர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
கூடலூர்,
விளையாட மனம் இருக்கு... ஆனால், மைதானம் இல்லை... கூடலூரில் உள் அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா? என இளைஞர்கள், வீரர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பின் தங்கியுள்ளனர்
ஓடி விளையாடு பாப்பா... நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா என பாடினார் பாரதி. கேரளளா, கர்நாடகா, தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் பகுதியாக கூடலூர் உள்ளது. மிதமான தட்பவெப்ப நிலையை கொண்ட குளு குளு காலநிலை நிலவும் பகுதியாக கூடலூர் திகழ்கிறது. பல்வேறு பெருமைகளைக் கொண்டதாக விளங்கினாலும், போக்குவரத்து உள்பட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கி உள்ளது.
இங்கு விளையாட்டு மைதானம் இல்லாததால் இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு நல ஆர்வலர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதனால் விளையாட்டு துறையிலும் இப்பகுதி இளைஞர்கள் பின்தங்கி உள்ளனர். இதனால் கூடலூரில் உள் அரங்குடன் கூடிய தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
விளையாட்டு மைதானம்
பள்ளி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் குறுவள மைய போட்டிகள் எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாத திறந்த வெளி இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தகை சால் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. பள்ளிக்கு சொந்தமாக திறந்தவெளி மைதானம் உள்ளது. போதிய நிதி இல்லாததால் மைதானம் தரம் உயர்த்தப்படாமல் காணப்படுகிறது.
ஜூன் தொடங்கி 6 மாதங்கள் தொடர் மழை பெய்யும் சமயத்தில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பல மாதங்கள் விளையாட முடியாமல் விளையாட்டு வீரர்கள் தவித்து வருகின்றனர். எனவே, இனிவரும் காலங்களில் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
கிடப்பில் போடப்பட்டது
கூடலூர் விளையாட்டு வீரர் சிவா:-
ஆண்டுதோறும் கோடை காலத்தில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கைப்பந்து உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. காலத்துக்கு ஏற்ப இளம் தலைமுறை வீரர்களை தயார்படுத்த முடியாமல் உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் கூடலூரில் இதுவரை அமைக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உள் மற்றும் திறந்தவெளி விளையாட்டு அரங்கு அமைப்பதற்காக அதிகாரிகள் நிலம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் என்னை போன்ற விளையாட்டு நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்காததால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் போதிய நிதி ஒதுக்கி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோட்டா முறையில் முன்னேறுகின்றனர்
கூடலூர் ஆண்டனி:-
அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரை சந்தித்து கோரிக்கை விடுத்த போது மைதானம் அமைக்க போதிய நிலம் இல்லை என காரணம் கூறுகின்றனர். அரசு நிலம் அதிகமாக உள்ளன. அதை கையகப்படுத்தி தரமான விளையாட்டு மைதானம் அமைக்கலாம். ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதியில் விளையாட்டு மைதானங்கள் இருப்பதால் அப்பகுதி இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துகின்றனர்.
இதன் மூலம் பல்வேறு துறைகளில் கோட்டா முறையில் இடம் பிடித்து முன்னேறுகின்றனர். ஆனால், இந்த வாய்ப்பு கூடலூர் இளைஞர்களுக்கு கிடைப்பதில்லை. கூடலூரில் 6 மாதங்கள் தொடர்ந்து மழை பெய்வதால் உள் அரங்குடன் கூடிய விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.
கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மைதானம் போதிய இடவசதியுடன் உள்ளது. அதை தரம் உயர்த்துவதால் கூடலூர் கல்வி மாவட்ட மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள் பயனடைவார்கள்.
தவறான பாதைக்கு செல்கின்றனர்
கூடலூர் கெவிப்பாரா வெண்ணிலா:-
விளையாட்டு மைதானம் ஒருவரது உடல்நிலை, மனநிலையை சீரமைக்கும் இடம். இன்றைய காலகட்டத்தில் படிப்பு, வேலை என அனைத்து தரப்பினரும் மன அழுத்தத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இதுதவிர சமூக வலைதளங்கள் மீது நாள் முழுவதும் கவனம் செலுத்துவதால் உடல் நலன் பாதிக்கப்படுகிறது. கூடலூரில் போதிய விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் போதை பழக்கம் உள்ளிட்ட தவறான பாதையில் சென்று தங்களது உடலை மட்டுமின்றி வாழ்க்கையும் கெடுத்து கொள்கின்றனர்.
இதற்கு ஒரே தீர்வு ஒரு மைதானம் தான். மைதானம் அமைவது குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அனைத்து வயதினருக்கும் தேவையான ஒன்றாகும். விளையாட்டு சக மனிதர்களிடம் நட்பு பாராட்ட உதவும். இளைஞர்களும் தங்களுக்கென்று ஒரு அணியை திரட்டி ஏதாவது ஒரு வகை விளையாட்டுகளில் ஈடுபட்டு, தங்களது உடலை மேம்படுத்துவதோடு திறமைகளை வெளிப்படுத்தி துறைகளில் சாதிக்க முடியும். இதனால் கூடலூரில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கலெக்டரை சந்தித்து மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரமைக்க வேண்டும்
பந்தலூர் நவ்சாத்:-
பந்தலூரில் பொது விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானம் மோசமாக உள்ளதால், கைப்பந்து, கால்பந்து விளையாட முடியாமல் அவதிப்படுகின்றனர். மைதானத்தை சீரமைக்ககோரி மாவட்ட கலெக்டர், நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிரமத்துக்கு மத்தியில் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மைதானத்தை சீரமைக்கவும், சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.