ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா?
எளவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருமக்கோட்டை:
எளவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆபத்தான வளைவு
திருமக்கோட்டை அருகே எளவனூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பல்வேறு பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி அருகே சாலையில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவில் எதிரே வரும் வாகனங்கள் வருவது தெரியாமல் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகிறது.
வாகன ஓட்டிகள் அவதி
குறிப்பாக பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால் இந்த சாலையில் செல்லவே வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரும் விபத்து ஏற்படும் முன்பு பள்ளி அருகே உள்ள ஆபத்தான வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.
வேகத்தடை அமைக்காவிட்டால் போராட்டம்
விரைவில் வேகத்தடை அமைக்கவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என பெற்றோர் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.