காவிரி விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் புதிய அமர்வில் நியாயம் கிடைக்குமா?


காவிரி விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் புதிய அமர்வில் நியாயம் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்


காவிரி விவகாரம் தொடர்பாக விசாரிக்கும் புதிய அமர்வில் நியாயம் கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய அமர்வு

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் இருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் இருந்து உரிய நீரை திறந்துவிட வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகஅரசு சார்பில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தநிலையில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு நியமிக்கப்படும் என்றும், அந்த அமர்வில் தங்கள் வாதங்களை முன் வைக்கவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து டெல்டா விவசாயிகள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-

எதிர்பார்ப்பு

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன்:- ஜூன், ஜூலை, ஆகஸ்டு 11-ந் தேதி வரை தமிழகத்திற்கு 37 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் தர வேண்டிய பாக்கி இருக்கிறது. இந்த தண்ணீரை கர்நாடகம் வழங்கி இருந்தால் தமிழகஅரசு சுப்ரீம ்கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்காது. நமக்குரிய தண்ணீரை தராததால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழகஅரசு சார்பில் வலியுறுத்தப்பட்டும், கர்நாடகம் கொடுக்காததால் சுப்ரீம் கோர்ட்டிற்கு தமிழகஅரசு சென்றுள்ளது.ஏற்கனவே ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என தனது இறுதித்தீர்ப்பில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி மாதம் வாரியாக கர்நாடகஅரசு தண்ணீரை கொடுத்து இருந்தால் தற்போது தமிழகத்தில் குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டு இருக்காது. தற்போது புதிய அமர்வு சட்டத்தின்படி 37 டி.எம்.சி. தண்ணீரை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். குறுவை பயிரை காக்க வேண்டும் என்றால் கர்நாடகம் தினமும் 24 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும். கர்நாடக அணைகளில் 90 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. உபரிநீரை மட்டுமே திறந்து விட வேண்டும் என கர்நாடகஅரசு இருக்கிறது. நமக்கு உபரி நீர் தேவையில்லை. உரிமை நீர் தான் தேவை. புதிய அமர்வில் நியாயம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

வரவேற்பு

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் ஜீவக்குமார்:- காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. 17 ஆண்டுகளாக தீவிர விசாரணை நடத்திய பிறகு தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை உரிய முறையில் கொடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த 1990-ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு இறுதித்தீர்ப்பு வந்தது. இந்த தீர்ப்பு 2013-ம் ஆண்டு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் தான் பிரச்சினை இருக்கிறது.

புதிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழகஅரசு மூத்த வக்கீல்கள் மூலம் அழுத்தமாக தங்களது வாதத்தை முன்வைக்க வேண்டும். இது மறுவிசாரணை கிடையாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்த உத்தரவு பிறப்பிப்பதற்கான விசாரணை தான். நாம் ஏற்கனவே நடவு செய்த பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்கிறோம். புதிதாக நடவு செய்வதற்காக அல்ல. இதனால் 48 மணி நேரத்தில் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீர் அளவில் இருந்து குறைந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். கர்நாடகம், தமிழகம், கேரளாவில் உள்ள அணைகளின் கட்டுப்பாட்டை காவிரி மேலாண்மை ஆணையம் எடுத்து கொள்ள வேண்டும்.


Next Story