பஞ்சமி நிலத்தை மீட்க பா.ஜனதா நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா? - எச்.ராஜா கேள்வி
பஞ்சமி நிலத்தை மீட்க பா.ஜனதா நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா? என மதுரையில் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
பஞ்சமி நிலத்தை மீட்க பா.ஜனதா நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா? என மதுரையில் எச்.ராஜா கேள்வி எழுப்பினார்..
மனு கொடுக்கும் போராட்டம்
மத்திய அரசு, பட்டியல் சமுதாய மக்களுக்காக ஒதுக்கக்கூடிய சிறப்பு நிதியை முறையாக பயன்படுத்தாமல் தமிழக அரசு திரும்பி அனுப்பியதோடு, மாற்று திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக கூறி மதுரை தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையின் கையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
பா.ஜ.க. செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான எச்.ராஜா தலைமையில் பா.ஜ.க.வினர் கோரிக்கை மனுவை அம்பேத்கர் சிலையில் வைத்தனர். இதனை தொடர்ந்து எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி வைத்துள்ளது. சமூக நீதி பாதுகாப்பு என கூறி பட்டியல் சமுதாய மக்களுக்கு துரோகத்தை தமிழக அரசு செய்து வருகிறது. அதனை சட்டமேதை அம்பேத்கர்தான் தட்டி கேட்க வேண்டும். அதற்காகத்தான், அம்பேத்கர் சிலைக்கு மனு கொடுத்துள்ளோம். மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிதி அடங்கிய பட்டியலை அம்பேத்கர் சிலையிடம் வழங்கியுள்ளோம்.
திருமாவளவன்
திராவிட கட்சிகள் பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக அநீதி செய்கின்றன. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தி.மு.க.வுடன் ஏன் இன்னும் இருக்கிறார் என்பது தெரியவில்லை. வேங்கைவயல் சம்பவத்தில் திருமாவளவன் ஒரு நாள் கூட சென்று போராட்டத்தில் ஈடுபடவில்லை. ஏனென்றால் அந்த சம்பவத்தில் தி.மு.க. கவுன்சிலர் ஈடுபட்டதாக கூறுகிறார்கள். திருமாவளவனுக்கு பட்டியல் சமுதாய மக்கள் மீதான நலனில் அக்கறை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளது. இதனை திருமாவளவன் ஆதரிப்பாரா?. பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர பா.ஜனதா நடத்தும் போராட்டத்தில் திருமாவளவன் பங்கேற்பாரா? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிலையில் தாமரைப்பூ
அப்போது மாவட்ட தலைவர் சுசீந்திரன் உடனிருந்தார். முன்னதாக அம்பேத்கர் சிலையின் கையில் சிலர் தாமரை பூவையும் வைத்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல், அவனியாபுரத்தில் பா.ஜனதா மேற்கு மாவட்டம் சார்பில் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.