திருமருகல் தனி தாலுகாவாக அறிவிக்கப்படுமா?


திருமருகல் தனி தாலுகாவாக அறிவிக்கப்படுமா?
x
தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கனவை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற 30 ஆண்டு கனவை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வருவாய் கிராமங்கள்

நாகை மாவட்டத்தில் உள்ள 85 வருவாய் கிராமங்களில் 54 வருவாய் கிராமங்கள் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டவை. திருமருகல் வருவாய் சரகத்தில் 18 வருவாய் கிராமங்களும், திருக்கண்ணபுரம் வருவாய் சரகத்தில் 19 வருவாய் கிராமங்களும், கங்களாஞ்சேரி சரகத்தில் 17 வருவாய் கிராமங்களும் உள்ளன. திருமருகல் ஊராட்சி ஒன்றியம் 39 ஊராட்சிகளையும், திட்டச்சேரி பேரூராட்சியையும் உள்ளடக்கிய பகுதி.

இப்பகுதியில் 209 குக்கிராமங்கள் உள்ளன. வேளாண்மையை முக்கியமாக கொண்ட திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் 5-க்கும் மேற்பட்ட வேளாண் கிடங்குகள் உள்ளன. முடிகொண்டான் ஆறு, திருமலைராஜன் ஆறு, அரசலாறு, வடக்கு புத்தாறு, தெற்கு புத்தாறு, வளப்பாறு, நரிமணியாறு, வீரமுட்டி ஆறு, ஆழியான் ஆறு, பிராவடையான் ஆறு ஆகிய ஆறுகள் மூலம் இப்பகுதியில் சுமார் 13 ஆயிரம் எக்டரில் வேளாண் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

அரசு பணிகளுக்கு நீண்டதூர பயணம்

திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் 90-க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்து அங்கன்வாடி மையங்களும், 12 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும், 40-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளும், 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும், 5-க்கும் மேற்பட்ட கால்நடை ஆஸ்பத்திரிகளும் உள்ளன. 5 அரசு மேல்நிலைப்பள்ளிகளும், 6 அரசு உயர்நிலைப்பள்ளிகளும், 84 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளும் உள்ளன. இங்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு நிலையம், வேளாண்மை வளர்ச்சி அலுவலகம், கால்நடை ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, உதவி தொடக்கக்கல்வி அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், துணை மின் நிலையம் என ஒரு தாலுகாவுக்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் உள்ளன.

ஆனால் திருமருகல் தனி வட்டமாக இல்லை என்பது இப்பகுதியில் நீடித்துவரும் பிரச்சினை. திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராராத்திமங்கலம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் தாசில்தார் அலுவலகம் மூலம் பெறவேண்டிய அரசு பணிகளுக்கு நாகைக்கு வர வேண்டுமெனில் கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து நாகூர் பயணித்து பின்னர் நாகூரில் இருந்து நாகைக்கு வர வேண்டி உள்ளது. பயண தொலைவு சுமார் 35 கிலோமீட்டர்.

30 ஆண்டு கோரிக்கை

அதேபோல் அம்பல் போன்ற பகுதிகளை சேர்ந்த மக்களும் தாசில்தார் அலுவலகம் செல்ல ஏறத்தாழ இதே அளவு தொலைவு பயணிக்க வேண்டி உள்ளது. இதை தவிர திருமருகல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேறு சில பகுதிகளை சேர்ந்த யூனியன் பிரதேசமான காரைக்கால் மாவட்டம் வழியே நாகை வர வேண்டி உள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மிக நீண்ட தொலைவு கொண்ட திருமருகல் தனி தாலுகாவாக இயங்குவதற்கு தேவையான நிர்வாக ரீதியான அனைத்து கட்டமைப்புகளும், அலுவலக கட்டமைப்புகளும் போதுமான மக்கள் தொகையும் வருவாயும் கொண்ட இந்த பகுதியை, தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கை ஆகும்.

தாலுகாவாக அறிவிக்காதது ஏன்?

நாகை மாவட்டத்தில் 35 வருவாய் கிராமங்கள் கொண்ட ஒரு பகுதி தனி தாலுகாவாக இயங்கும் நிலையில், 54 வருவாய் கிராமங்களை கொண்ட திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்காதது ஏன்? என்ற மக்களின் நியாயமான கோரிக்கைக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், மாவட்ட நிர்வாகமும் இதுவரை பதிலளிக்கவில்லை. தேர்தல் காலங்களில் திருமருகல் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ளும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் அனைவரும் தவறாமல் அளிக்கும் ஒரு வாக்குறுதி திருமருகலை தனியிடமாக கொண்ட தனி தாலுகாவாக அமைக்கப்படும் என்பது.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதற்கான உரிய முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்று திருமருகல் பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது உள்ள எம்.எல்.ஏ. முகமது ஷாநவாஸ் பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொண்டாலும் அதற்கான பயன் இதுவரை கிடைக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story