18 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளில் காலி இடங்கள் அதிகரிப்பா? டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் விளக்கம்
18 லட்சம் பேர் எழுதிய குரூப்-4 பதவிகளுக்கான காலி இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் விளக்கம் அளித்தனர்.
சென்னை,
கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட குரூப்-4 பதவிகளில் 7 ஆயிரத்து 381 பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்தது.
அதன்படி 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, தேர்வை கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 24-ந் தேதி 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வெளியானது.
முதலில் 7 ஆயிரத்து 381 இடங்களுடன் அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், அதன் பின்னர், 9 ஆயிரத்து 870 இடங்களாக அதிகரிக்கப்பட்டன. அதையடுத்து மீண்டும் சில காலி இடங்கள் சேர்க்கப்பட்டு 10 ஆயிரத்து 117 இடங்களாக அறிவிக்கப்பட்டன.
காலி இடங்கள் அதிகரிப்பா?
இந்த நிலையில் கொரோனா தொற்றுக்கு பிறகு 3 ஆண்டு இடைவெளிவிட்டு தேர்வு நடத்தப்படுவதால், குறைந்தது 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை காலி இடங்களாக அறிவிக்க தேர்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
ஆனால் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமலேயே இருந்து வருகிறது. இதற்கிடையில் 18 லட்சம் பேர் எழுதிய தேர்வு முடிவு வெளியான குரூப்-4 பதவிகளுக்கான காலி இடங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டு இருப்பதாக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
முதலில் ஏற்கனவே உள்ள 10 ஆயிரத்து 117 இடங்களுடன் 83 இடங்கள் அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 600-க்கும் மேற்பட்ட இடங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
உயர் அதிகாரி விளக்கம்
இதுபற்றி டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, '10 ஆயிரத்து 200 இடங்கள் இதுவரை குரூப்-4 பதவிகளில் காலி இடங்களாக உள்ளன. அதற்கு தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கும் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். கலந்தாய்வை பொறுத்தவரையில், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திடம் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான பட்டியல் இன்னும் வரவில்லை. அதுவந்ததும் விரைவில் முறையான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டு, இளநிலை உதவியாளர் பதவியில் இருந்து காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன' என்றார்.
பணி இடங்களை நிரப்புவதில் முழு அதிகாரம் கொண்ட டி.என்.பி.எஸ்.சி. அதிகாரி ஒருவரை வாரியத்தின் குழு கூட்டத்துக்குகூட அழைக்காமல் முடிவுகள் எடுக்கப்படுவதாக உயர்மட்ட அதிகாரிகள் தகவலாக தெரிவிக்கும் நிலையில், குரூப்-4 பதவிகளுக்கான கலந்தாய்வு தாமதத்துக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.