வானரமுட்டி புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
புதர் மண்டி கிடக்கும் வானரமுட்டி புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நாலாட்டின்புத்தூர்:
புதர் மண்டி கிடக்கும் வானரமுட்டி புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
காட்சிப்பொருளான புறக்காவல் நிலையம்
தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூரில் உள்ள போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால், அதனை மூடி விட்டு, வானரமுட்டியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் நாலாட்டின்புத்தூரில் புதிய போலீஸ் நிலையம் மற்றும் போலீசாருக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.
தொடர்ந்து வானரமுட்டியில் உள்ள போலீஸ் நிலையத்தை மூடி விட்டு, நாலாட்டின்புத்தூரில் புதிய போலீஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு வானரமுட்டி போலீஸ் நிலையத்தை புறக்காவல் நிலையமாக பயன்படுத்தாமல் 3 ஆண்டுகளுக்கு மேலாக வெறும் காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே வானரமுட்டியில் புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகரிக்கும் குற்ற செயல்கள்
இதுகுறித்து வானரமுட்டியைச் சேர்ந்த வசந்தகுமார் கூறுகையில், ''கோவில்பட்டி- கழுகுமலை மெயின் ரோட்டில் வானரமுட்டியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக புறக்காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. நாலாட்டின்புத்தூரில் பழுதடைந்த போலீஸ் நிலைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டுவதற்காக, அதனை வானரமுட்டிக்கு மாற்றினர். பின்னர் நாலாட்டின்புத்தூரில் புதிய போலீஸ் நிலையம் கட்டி திறந்தவுடன், வானரமுட்டி புறக்காவல் நிலையத்தை மூடி விட்டனர். எனவே, வானரமுட்டியில் மீண்டும் புறக்காவல் நிலையம் செயல்பட வேண்டும்.
இங்கு புறக்காவல் நிலையம் இல்லாததால் சமூக விரோத செயல்கள், குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. புறக்காவல் நிலையம் அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலக வளாகத்திலேயே இரவில் மதுபிரியர்கள் மதுகுடித்து விட்டு பாட்டில்களை வீசி செல்கின்றனர். கல்லூரணி சாலை, செட்டிகுறிச்சி விலக்கு பகுதியிலும் மதுபிரியர்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இப்பகுதி மக்கள் புகார் தெரிவிப்பதற்காக சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாலாட்டின்புத்தூர் போலீஸ் நிலையத்துக்கு செல்ல வேண்டியுள்ளது'' என்று வேதனையுடன் தெரிவித்தார்.
துருப்பிடித்த வாகனங்கள்
இதுதொடர்பாக கல்லூரணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''வானரமுட்டியில் புறக்காவல் நிலையம் மீண்டும் செயல்பட வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் பல முறை மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புறக்காவல் நிலைய வளாகம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்களும் துருப்பிடித்து உருக்குலைந்து வருகின்றன.
தற்போதும் புறக்காவல் நிலைய கட்டிடம் நல்ல நிலையில் உள்ளது. எனவே, அதனை உடனே திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் வானரமுட்டி சுற்று வட்டார கிராம மக்கள் பெரிதும் பயனடைவர்'' என்றார்.