விராலிமலை உழவர் சந்தை புத்துயிர் பெறுமா?


விராலிமலை உழவர் சந்தை புத்துயிர் பெறுமா?
x

விவசாயிகளும், பொதுமக்களும் பயன் பெறும் வகையில் விராலிமலை உழவர்சந்தை புத்துயிர் பெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

விராலிமலை:

உழவர் சந்தை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவர் சந்தையானது காய்கறிகள் விளைவிக்கும் விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் தங்கள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்ற நல்ல நோக்கில் தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த உழவர் சந்தையில் 20 தரை கடைகள் உள்ளது. வேளாண்மை துறையின் கீழ் நடத்தப்படும் உழவர் சந்தையில் தோட்டக்கலைத் துறையினர் சான்றிதழ் அளித்த பிறகு தான் விவசாயிகள் இங்கு வியாபாரம் செய்யலாம். தொடக்கத்தில் செயல்பட்டு வந்த இந்த உழவர் சந்தையானது காலப்போக்கில் செயல் இழந்து விட்டது.

பயன்பாட்டில் உள்ளது போல்...

மேலும் ஆட்சி மாற்றம் காரணமாக இந்த உழவர் சந்தை வெறும் காட்சி பொருளாக மாறியது. விராலிமலையை சுற்றியுள்ள விவசாயிகள் தற்போது இயற்கை விவசாயத்தை அதிக அளவில் கடைப்பிடித்து வருகின்றனர். அவ்வாறு தங்கள் விளைவிக்கும் காய்கறிகளை கொண்டு சென்று விற்பனை செய்ய திருச்சி அல்லது மணப்பாறை மார்க்கெட்டுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால் லாபம் குறைந்து வணிக ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். ஆனால் விராலிமலை உழவர் சந்தையில் அவ்வப்போது இந்த துறை சார்ந்த அதிகாரிகள் தலைமையில் ஒரு சில விவசாயிகளை கொண்டு நிகழ்ச்சி நடத்தி உழவர் சந்தை செயல்பாட்டில் வைத்து வருகின்றனர்.

மேலும் தற்போது பெயருக்கு உழவர் சந்தையில் ஒரு சிறிய இடத்தில் ஏதாவது ஒரு காய்கறி வகையை மட்டும் வைத்து உழவர் சந்தையை பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளதைப்போல் காட்டி வருகின்றனர். இதனால் இங்கு பணியில் அலுவலர்கள் இருக்கின்றனரா? அல்லது இல்லையா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தற்போது இந்த உழவர் சந்தை இருக்கும் இடமானது மிகவும் தாழ்வான இடத்தில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும். அவ்வாறு பராமரிப்பின்றி இருந்ததால் தான் தற்போது தரைப் பகுதிகள் அனைத்தும் சேதமடைந்து அங்குள்ள கட்டிடமும் சேதமடையும் நிலையில் இருந்து வருகிறது.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு இந்த உழவர் சந்தையானது பழையபடி செயல்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இதுவரை முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் இந்த உழவர் சந்தையை முழு நேர செயல்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக விற்கலாம்

விராலிமலையை சேர்ந்த விவசாயி வடிவேல் கூறுகையில், நான் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றேன். எனது விவசாய நிலத்தில் கத்தரி, வெண்டை, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயம் செய்து விற்பனை செய்து வருகிறேன். அவ்வாறு தினமும் விளையும் காய்கறிகளை விற்பனை செய்வதற்கு மணப்பாறை அல்லது திருச்சி சந்தைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் போக்குவரத்து செலவு அதிகமாகி எங்களது லாபம் குறைகிறது. மேலும் நாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் நாங்களே விற்கும் பட்சத்தில் எங்களுக்கு லாபம் கிடைப்பதோடு பொதுமக்களும் லாபம் அடைகின்றனர். எனவே விராலிமலையில் உள்ள உழவர் சந்தையை செயல்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

இயற்கை வேளாண் விவசாயிகள் பாதிப்பு

இயற்கை விவசாயி வெங்கட்ராஜ் கூறுகையில், சில காலமாக இயற்கை வேளாண் முறையில் காய்கறி உற்பத்தி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டிவந்த நிலையில், தற்போது அதனை கைவிட்டு மீண்டும் ரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்தி காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடையூறுகளை தாண்டி இயற்கை உற்பத்தியில் ஈடுபட்டாலும் காய்கறிகளை சந்தைப்படுத்துவதில் எங்களுக்கு மிகவும் சிக்கல் உள்ளது. காரணம் ரசாயன பூச்சி மருந்துகள் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் காய்கறிகளானது இயற்கை முறையில் விளையும் காய்கறிகளை காட்டிலும் அதிக விளைச்சல் உள்ளது. இதனால் நாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே இயற்கை வேளாண் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே உழவர் சந்தையில் இயற்கை விவசாயிகளுக்கு தனி கடை ஒதுக்கீடு செய்து இயற்கை முறையில் விளையும் காய்கறிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தரமான காய்கறிகள் வாங்க முடியும்

விராலிமலையை சேர்ந்த குணசீலன் கூறுகையில், 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உழவர் சந்தையானது ஆட்சி மாற்றத்திற்கு பின்பு செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ள உழவர் சந்தையை சீரமைத்து விவசாயிகளுக்கு வியாபாரம் செய்யும் வகையில் கடைகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் கடைகளில் வாங்கும் விலையை காட்டிலும் குறைவான மற்றும் தரமான காய்கறிகள் வாங்க ஏதுவாக இருக்கும் என்றார்.


Next Story