தேனி மாவட்டத்திற்கு விரைவில் வருகை தரும்சட்டமன்ற குழுவுக்கு மனுக்கள் அனுப்ப20-ந்தேதி கடைசி நாள்:கலெக்டர் தகவல்


தேனி மாவட்டத்திற்கு விரைவில் வருகை தரும்சட்டமன்ற குழுவுக்கு மனுக்கள் அனுப்ப20-ந்தேதி கடைசி நாள்:கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்திற்கு விரைவில் வருகை தர உள்ள சட்டமன்ற மனுக்கள் குழுவுக்கு மனுக்களை வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

மனுக்கள் குழு

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2023-2024-ம் ஆண்டுக்கான மனுக்கள் குழு தேனி மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி தேனி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ. சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சினைகள், குறைகள் குறித்து ஒரு மனுவை (5 நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர் அல்லது மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு 'தலைவர், மனுக்கள் குழு. தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை- 600 009' என்ற முகவரிக்கு வருகிற 20-ந்தேதிக்குள் அனுப்பலாம்.

மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சினைகளை குறித்ததாக மனுக்கள் இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாகவும் இருத்தல் வேண்டும்.

ஆய்வு

ஆனால் மனுவில் தனிநபர், நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலை வாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கி கடன் அல்லது தொழில் கடன் வேண்டுதல், அரசு பணியின் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலகங்களில் குறைகளை வெளிப்படுத்துதல் போன்றவை தொடர்பாக இருக்கக் கூடாது.

சட்டமன்றப்பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மனுதாரர் முன்னிலையில் குழுக் கூட்டத்தில் கேட்டறியப்படும். இதுகுறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 21-ந்தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story