மேட்டூர் அணையில் இருந்து வலது, இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு


மேட்டூர் அணையில் இருந்து வலது, இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுமா? பாசன விவசாயிகள் எதிர்பார்ப்பு
x

மேட்டூர் அணையில் இருந்து வலது, இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என பாசன விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ஈரோடு

அம்மாபேட்டை

மேட்டூர் அணையில் இருந்து வலது, இடது கரை வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என பாசன விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கேள்விக்குறி

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து வலது மற்றும் இடது கரை வாய்க்காலில் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 15-ந் தேதிக்குள் இருப்பை பொறுத்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

கர்நாடக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் போது அந்தந்த காலகட்டங்களில் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தண்ணீரை திறப்பது உண்டு. இந்த நிலையில் 120 அடி கொள்ளளவு உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 68 அடியாக உள்ளது.

இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுமா என கேள்விக்குறியாக உள்ளது.

வாய்க்கால் திட்டம்

இதுகுறித்து அந்தியூர், பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்க இணை செயலாளர் பி.ராமலிங்கம் மற்றும் சிலர் கூறியதாவது:-

மேட்டூர் அணையில் இருந்து காவிரி கிராஸ் என்ற இடத்தில் வலது மற்றும் இடது கரை வாய்க்கால்களில் தண்ணீர் பிரிந்து இடது கரையில் சேலம், நாமக்கல் மாவட்ட விவசாய விளைநிலங்களும், வலது கரையில் சேலம், ஈரோடு மாவட்ட விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் வலது, இடது கரை வாய்க்கால் திட்டம் 1955-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பதிவு பெற்ற ஆயக்கட்டு விவசாய விளைநிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு 137 நாட்கள் தண்ணீர் வாய்க்காலில் செல்லும்.

எதிர்பார்ப்பு

மேட்டூர் அணையில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் வலது கரை பிரதான வாய்க்கால் 43.20 கி.மீ தொலைவிலும், கிளை வாய்க்கால்கள் 58.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வீதம் செல்லும் வகையில் வெட்டப்பட்ட இவ்வாய்க்கால் மூலம் விவசாயிகள் நெல் நடவு செய்து பயன் பெறுகிறார்கள்.

தற்போது நெல் நடவு செய்யும் காலம் தொடங்கி விட்டதால் வாய்க்காலில் தண்ணீர் வருமா வராதா என்ற எதிர்பார்ப்புடன் பாசன விவசாயிகள் காத்திருக்கிறோம். அதே நேரம் வலது கரை வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுவதால் தண்ணீர் திறப்பதற்கு முன் வாய்க்காலை தூர்வார துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தண்ணீர் திறப்பதன் மூலம் கிணற்றின் நீர்மட்டமும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும். எனவே விவசாயிகளின் நலன் கருதி உரிய காலத்தில் நெல் நடவு செய்திட வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இதுகுறித்து அமைச்சர் முத்துசாமியிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story