டேனிஷ் கவர்னர்கள் வசித்த பங்களாவை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுமா?


டேனிஷ் கவர்னர்கள் வசித்த பங்களாவை சுற்றிப்பார்க்க அனுமதி வழங்கப்படுமா?
x

தரங்கம்பாடியில், 34 டேனிஷ் கவர்னர்கள் வசித்த பங்களாவை சுற்றிப்பார்க்க மீண்டும் அனுமதி வழங்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, கி.பி.18-ம் நூற்றாண்டில் டென்மார்க் நாட்டின் முக்கிய வணிக நகராக விளங்கியது. கோட்டை, துறைமுகம், தேவாலயங்கள், பங்களாக்கள் என பல வகையான கட்டிடங்களை அவர்கள் தரங்கம்பாடியில் கட்டினர். தரங்கம்பாடியில் கடற்கரைக்கு வெகு அருகில், 238 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பங்களா உள்ளது. டேனிஷ் ஆட்சி காலத்தில் 34 கவர்னர்கள் தொடர்ச்சியாக வசித்த பாரம்பரியத்தை கொண்டது இந்த பங்களா.

கடற்கரைக்கு அருகில் கம்பீரம்

தரங்கம்பாடி கடற்கரைக்கு வெகு அருகிலேயே கம்பீரமான தோற்றத்துடன், கலை நுணுக்கங்களுடன் கி.பி.1784-ம் ஆண்டு டேனிஷ் காரர்கள் இந்த பங்களாவை கட்டினர். இந்தியாவில் நடைபெற்ற டென்மார்க் நாட்டின் வணிகத்தை அந்த நாட்டின் கவர்னர்கள் இந்த பங்களாவில் தங்கியபடி கவனித்து வந்தனர். மிக உயரமான தூண்கள், நீண்ட வராண்டா, உயரமான மேற்கூரைகளை கொண்ட அறைகள் ஆகியவற்றை கொண்டு தூய வெள்ளை நிறத்தில் 'பளிச்' என காட்சி அளித்தது இந்த கவர்னர் பங்களா.

காலப் போக்கில் பயன்பாட்டில் இல்லாமல், சிதிலம் அடைந்து விட்டது. கடந்த 2007-ம் ஆண்டு டென்மார்க் நாட்டின் தேசிய அருங்காட்சியகம் இந்த பங்களாவை பாரம்பரியம் மாறாமல் புதுப்பிக்க முன் வந்தது. தமிழக அரசின் சுற்றுலாத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை ஆகியவை இந்த பணிக்கு ஒத்துழைப்பு அளித்தன.

கடந்த 2009-ம் ஆண்டு ரூ.87 லட்சம் செலவில் இந்த பங்களாவை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. டெல்லியை சேர்ந்த இந்திய கலை மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் 'இண்டாக்' அறக்கட்டளை, இந்த பங்களாவை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணியை மேற்கொண்டது. பங்களாவின் மேற்கூரை மீது 12 அடிக்கு மரங்கள் வளர்ந்து, இடிபாடுகளுடன் இருந்த இந்த கட்டிடத்திற்கு 3 ஆண்டுகள் பாடுபட்டு, 'இண்டாக்' நிறுவன பொறியாளர்கள் புத்துயிர் கொடுத்தனர்.

தேக்கு மர தூண்கள்

70 முதல் 90 ஆண்டுகள் பழமையான தேக்கு மரங்களை தேடிப்பிடித்து தூண்கள் அமைக்கப்பட்டன. வெல்லம் சேர்க்கப்பட்ட சுண்ணாம்பு, தட்டையான செங்கற்கள் என பழைய கால கட்டிட நுணுக்கங்கள் பயன்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட இந்த பங்களாவை கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

ஆனால், அதற்கு பின்னர் இந்த பங்களா பெரும்பாலும் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பங்களா புதுப்பிக்கும் பணியில் பங்குகொண்ட 'டிரான்குபார் அசோசியேசன்' எனப்படும் டென்மார்க்கில் இயங்கி வரும் அமைப்பின் தொடர் வேண்டுகோளை ஏற்று இந்த பங்களா 2016-ம் ஆண்டு சிறிது காலம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் சுற்றுலாத்துறை தரங்கம்பாடியில் உள்ள கவர்னர் பங்களா வரலாற்று சிறப்பு மிக்கதாக விளங்குவதாலும், பாதுகாப்பு தேவைப்படுவதாலும் புராதன மற்றும் வரலாற்று நினைவு சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1966-ன் கீழ் இதனை புராதன பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்க முடிவு செய்தது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

இந்த முடிவு குறித்து பொதுமக்கள் 2 மாதங்களுக்குள்(ஜனவரி 20, 2020-க்குள்) தங்கள் கருத்துகளை தமிழக அரசின் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது பூட்டிக்கிடக்கும் இந்த பங்களா மீண்டும் பொலிவிழந்து காணப்படுகிறது. இதை காண வரும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெளித்தோற்றத்தை மட்டுமே பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள். பங்களாவுக்குள் சென்று சுற்றிப்பார்க்க மீண்டும் அனுமதி கிடைக்குமா? என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story