வாருகால் பணி விரைவுப்படுத்தப்படுமா?
பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் வாருகால் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி,
பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் வாருகால் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாருகால் வசதி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள காமராஜர்புரம் காலனியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல போதிய வாருகால் வசதி இல்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாயத்து பொறுப்பு தலைவர் ராஜபாண்டியனிடம் முறையிட்டனர்.
இதனை தொடர்ந்து அவர் அந்த பகுதியை நேரில் ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில் புதிய வாருகால் அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. யூனியன் அதிகாரிகள் காமராஜர்புரம் காலனிக்கு வந்து வாருகால் அமைக்க தேவையான பணிகளை தொடங்க அனுமதி அளித்தனர்.
உரிய அறிக்கை
அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு வாருகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை தொடர்ந்து பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் தாலுகா அலுவலகத்தில் உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் சர்வே பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து உரிய அறிக்கை தர தாமதம் செய்வதால் காமராஜர்புரம் காலனியில் வாருகால் அமைக்கும் பணி நடைபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
விரைவுப்படுத்த வேண்டும்
இதுகுறித்து அந்த பகுதி வார்டு உறுப்பினர் சக்திவேல் கூறுகையில், காமராஜர்புரம் காலனியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலைகளில் செல்கிறது. இதனால் அங்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரி காமராஜர்புரம் காலனி பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உரிய அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றார். பஞ்சாயத்து நிர்வாகம் வாருகால் அமைக்கும் பணியினை தொடங்க தயாராக உள்ள போதும் சர்வே பிரிவு அதிகாரிகள் தாமதத்தால் பணிகள் நடைபெறாமல் உள்ளதை அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
ஆதலால் வாருகால் அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.