விவசாய நிலங்களில் காற்றாலை நிறுவனங்கள் மின்கம்பங்கள் அமைக்க கூடாது-பி.ஆர்.பாண்டியன் பேட்டி
“விவசாய நிலங்களில் காற்றாலை நிறுவனங்கள் மின்கம்பங்கள் அமைக்க கூடாது” என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
கோவில்பட்டி:
"விவசாய நிலங்களில் காற்றாலை நிறுவனங்கள் மின்கம்பங்கள் அமைக்க கூடாது" என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காற்றாலை மின்கம்பங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் விளைநிலங்களில் காற்றாலை நிறுவனங்களின் மின்கம்பங்களை விவசாயிகளின் அனுமதியின்றி அமைக்க கூடாது. கயத்தாறு அருகே தளவாய்புரத்தைச் சேர்ந்த சீனியம்மாள் என்பவர் தனது அனுமதியின்றி விவசாய நிலத்தில் காற்றாலை நிறுவனம் மின்கம்பம் அமைக்க கூடாது என்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனாலும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.
மின்கம்பங்கள், உயர் மின்கோபுரங்கள், காற்றாலை மின்கம்பங்கள் போன்றவற்றை பஞ்சாயத்து மற்றும் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் அமைக்க கூடாது என்று ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இரும்புக்கரம் கொண்டு தடுக்க...
சட்டவிரோதமாக மணல் அள்ளியதை தட்டிக்கேட்ட கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவரது அலுவலகத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற அச்சுறுத்தலை இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும். மத்திய அரசு மேம்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் என்ற பெயரில் ஒட்டுமொத்த பயிர் காப்பீடு திட்டத்தை தனியாருக்கு தாரைவார்த்து விட்டது. இதனால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் பனை வெல்லம் தயாரிப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் பதனீர் இறக்கும் தொழிலாளர்களை கள் இறக்குவதாக கூறி பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.