கடனை திருப்பி கேட்ட வியாபாரியின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு
கடனை திருப்பி கேட்ட வியாபாரியின் வீட்டு ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு
தக்கலை:
தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் ஜாண்ரோஸ் (வயது 72). இவர் வீட்டின் அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் சிஜோ (24) என்பவரின் தாயாருக்கு ரூ.10 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். பின்னர், ஜாண்ரோஸ் அந்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரவு ஜாண்ரோஸ் வீட்டில் இருந்தார்.
அப்போது, அஸ்வின் சிஜோ உள்பட 4 பேர் ஜாண்ரோசின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் அங்கிருந்த சோடா பாட்டில்களையும் அடித்து உடைத்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்த ஜாண்ரோசை பார்த்து அவர்கள் ஆயுதத்தை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜாண்ரோஸ் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் சிஜோ, வினித் (24), ஆகாஷ் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.