ரெயில் தண்டவாள பகுதியில் மின்வயர்பொருத்தும் பணி தீவிரம்


ரெயில் தண்டவாள பகுதியில் மின்வயர்பொருத்தும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் புதிய மின் வழித்தடத்தில் திருச்சியில் இருந்து தனி ரெயில் பெட்டியில் வந்த மின் ஊழியர்கள் மின்வயர் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அருகே ரெயில் தண்டவாள பகுதியில் புதிய மின் வழித்தடத்தில் திருச்சியில் இருந்து தனி ரெயில் பெட்டியில் வந்த மின் ஊழியர்கள் மின்வயர் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மின் மயமாக்கும் பணி

மதுரை ரெயில்வே கோட்ட பகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டையில் இருந்து மானாமதுரை வரை உள்ள ரெயில்வே வழித்தடத்தில் தெற்கு ரெயில்வே துறை சார்பில் மின் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. புதுக்கோட்டையில் இருந்து திருமயம், செட்டிநாடு, காரைக்குடி வரை இந்த பணிகள் நிறைவடைந்து தற்போது அந்த வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் காரைக்குடி ரெயில் நிலைத்தில் இருந்து மானாமதுரை வரை உள்ள ரெயில்வே வழித்தடத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்காக இந்த பணி பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. அதன் பின்னர் நெடுஞ்சாலைத்துறை சார்பில் காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா ரெயில்வே நிலையம் அருகே தற்போது ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மின்கம்பிகள்

இந்த பணிகள் ஏறக்குறைய 90 சதவீதம் வரை நிறைவு பெற்றதையடுத்து மீண்டும் காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் இருந்து மானாமதுரை வரை உள்ள ரெயில்வே தடத்தில் மின் மயமாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் மின்வயர்கள் செல்லும் வகையில் மின் கம்பங்கள் தண்டவாளங்கள் ஓரத்தில் நடப்பட்ட நிலையில் மின் வயர்கள் மட்டும் பொருத்தப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் ரெயில் மேம்பாலம் பணி நிறைவு பெறும் வகையில் மீண்டும் மின் கம்பங்களில் அதிக மின்னழுத்தம் கொண்ட மின் கம்பிகள் பொருத்தும் பணி நேற்று முதல் நடைபெற தொடங்கியது.

பொருத்தும் பணி

இதற்காக திருச்சியில் இருந்து தனி ரெயில் பெட்டி கொண்ட ரெயிலில் மின்வாரிய அதிகாரிகள் தலைமையில் 7 பேர் கொண்ட மின் ஊழியர்கள் ரெயில் பெட்டியின் மேல் பகுதியில் நின்றவாறு இந்த வழித்தடத்தில் புதிய மின்கம்பிகள் பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக நேற்று காரைக்குடி ரெயில்வே நிலையத்தில் இருந்து தேவகோட்டை ரஸ்தா வரை மின்கம்பிகள் பொருத்தும் பணி நடந்தது. இன்று தேவகோட்டை ரஸ்தா ரெயில் நிலையத்தில் இருந்து கல்லல் ரெயில் நிலையம் வரை மின் வயர்கள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகள் விரைவில் முடிந்த பின்னர் ராமேசுவரம் முதல் மானாமதுரை, காரைக்குடி வழியாக சென்னைக்கு இயக்கப்படும் அனைத்து ரெயில்களும் மின்சார ரெயில்களாக இயங்கும் என தெரிய வருகிறது.


Next Story