698 சுற்றுலா பயணிகளுடன்சொகுசு கப்பல் தூத்துக்குடி வருகை


தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 698 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் புதன்கிழமை காலையில் வந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 698 சுற்றுலா பயணிகளுடன் சொகுசு கப்பல் புதன்கிழமை காலையில் வந்தது.

சொகுசு கப்பல்

ஜெர்மனியை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 'அமீரா' என்ற சொகுசு கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கப்பல் 204 அடி நீளம் கொண்டது. 13 அடுக்குகளுடன் கூடிய சொகுசு கப்பலில் 413 அறைகள் உள்ளன. இந்த கப்பலில் 835 பயணிகள் ஒரே நேரத்தில் பயணம் செய்யலாம். இந்த கப்பல் மணிக்கு 38 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த கப்பலில் 3 ஓட்டல்கள், நூலகம், விளையாட்டு கூடம், நீச்சல் குளம், அழகு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. இந்த கப்பலில் கேப்டன் ஹூபர்ட் புளோர் தலைமையில் 386 மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த சொகுசு கப்பல் நேற்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. இந்த கப்பலில் 698 சுற்றுலா பயணிகள் வந்து உள்ளனர். இதில் ஜெர்மணி, ஆஸ்திரேலியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த பயணிகள் உள்ளனர். இது மட்டுமின்றி இந்த கப்பலில் தூத்துக்குடியை 5 பேர் சுற்றுலாவுக்காக புறப்பட்டு சென்றனர்.

வரவேற்பு

இந்த கப்பல் கடந்த மாதம் (டிசம்பர்) மாதம் 22-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. இந்த சொகுசு கப்பல் 125 நாட்கள் 25 நாடுகளுக்கு பயணம் செய்து 26.04.2023 அன்று ஜெர்மனி பிரமேராவன் துறைமுகத்தில் சுற்றுபயணத்தை முடிக்கிறது. கப்பல் மால்டா, எகிப்து, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு கடந்த 8-ந் தேதி மும்பையை வந்தடைந்தது. அங்கு இருந்து நேற்று முன்தினம் கொச்சிக்கு வந்து. நேற்று காலையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் துறைமுகத்தின் கூடுதல் கப்பல் தளத்தில் 10.30 மணியளவில் நிறுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் இருந்தவர்கள் ஆண்கள், பெண்கள் என அனைவரும் துறைமுகத்தை உற்சாகமாக பார்த்தனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை வரவேற்பதற்காக தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி மாணவர்கள் சார்பில் மேள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் போன்றவை நடந்தன. இதனை கப்பலில் இருந்து பார்த்த சுற்றுலா பயணிகள் தங்கள் கேமிரா மற்றும் செல்போன்களில் படம் பிடித்தனர். அவ்வப்போது கலைஞர்களை கைதட்டி உற்சாகமாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

உப்பளம்

இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு நடனமாடியபடி கலை பண்பாடுகள் குறித்து விளக்கக்கூடிய ராமச்சந்திரபிரபு உள்ளிட்ட 5 சுற்றுலா வழிகாட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தனர். இந்த கப்பலில் இருந்து இறங்கிய சுற்றுலா பயணிகளை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மற்றும் துறைமுக அதிகாரிகள் வரவேற்றனர். சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் நடனம் ஆடிய கலைஞர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அதன்பிறகு சுற்றுலா பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து குடியுரிமை அதிகாரிகள், பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்தனர். அதன்பிறகு சுற்றுலா பயணிகள் பஸ்சில் புறப்பட தயாரானார்கள். அப்போது சிலருக்கு போதிய இடவசதி இல்லாததால் வேன் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வேனில் ஏறி புறப்பட்டனர். இதில் 70 பயணிகள் பஸ் மூலம் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் கோவில், கதீட்ரல் ஆலயம் ஆகியவற்றை பார்வையிடுவதற்காக புறப்பட்டு சென்றனர். 200 பேர் தூத்துக்குடி பகுதியில் சுற்றி பார்க்க சென்றனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பனிமயமாதா ஆலயத்தை பார்வையிட்டனர். அதன்பிறகு, மாநகர பகுதிகளில் உள்ள உப்பளங்களுக்கு சென்றனர். அங்கு உப்பு குவியல்கள் வைத்து இருப்பதையும், ஜிப்சம் எடுப்பதையும் பார்த்தனர். உப்பு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதையும் ஆர்வமுடன் கேட்டு அறிந்து கொண்டனர்.

ஜெர்மன் பயணி

இந்த கப்பலில் வந்த ஜெர்மனியை சேர்ந்த ஓல்ப்கேங் கூறும் போது, நான் ஜெர்மனியில் இருந்து வருகிறேன். இந்த கப்பலில் நானும், எனது மனைவியும் வந்து உள்ளோம். நான் ஜெர்மனியில் உள்ள ஒரு டென்னிஸ் கிளப்பில் தலைவராக உள்ளேன். இந்த கப்பல் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறேன். கடந்த 8-ந் தேதி மும்பைக்கு வந்தேன். அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய அளவில் கடைகளுக்கு செல்ல முடியவில்லை. அதன்பிறகு கொச்சிக்கு வந்தோம். அங்கு நன்றாக இருந்து. நாங்கள் வெளியில் எந்த உணவு சாப்பிடவில்லை. அதே நேரத்தில் பல்வேறு வாசனை தரக்கூடிய இலைகளை மட்டும் எங்களுக்கு தந்தார்கள். அதனை வாங்கி பார்த்தோம். எங்கள் நாட்டில் தற்போது குளிர்காலம். அங்கு ஒரு டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை உள்ளது. ஆனால் இங்கு சீதோஷ்ன நிலை நன்றாக இருக்கிறது. சூரிய ஒளி உடலில் படுவது நல்லது. அந்த வகையில் இங்கு வெப்பநிலை நன்றாக இருக்கிறது. இதனை மிகவும் ரசிக்கிறேன். அதே போன்று துறைமுகங்களில் பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்பு அளித்தார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.

இந்த கப்பல் இரவு 7 மணி அளவில் தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு புறப்பட்டு சென்றது.


Next Story