தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியை நூறு சதவீதம் முடிக்க வேண்டும்: மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவுறுத்தல்
தூத்துக்குடியில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு பணியை நூறு சதவீதம் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை அதிகாரிகள் நூறு சதவீதம் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ அறிவுறுத்தி உள்ளார்.
ஆதார் எண் இணைப்பு
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடந்து வருகிறது. மாவட்டத்தில் நகர்ப்புற பகுதியான தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் இந்த பணி மிகவும் மந்தமாக உள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதில் மக்கள் ஆர்வம் இல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் இதுவரை சுமார் 40 சதவீதம் பேர் மட்டுமே ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து உள்ளனர்.
ஆய்வு கூட்டம்
இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை துரிதப்படுத்தும் விதமாக வாக்குப்பதிவு அலுவலரும், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருமான தி.சாருஸ்ரீ தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலாதண்டாயுதபாணி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
100 சதவீதம்
கூட்டத்தில் ஆணையாளர் பேசும் போது, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை இணைப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இந்த மாத இறுதிக்குள் 100 சதவீதம் இலக்கை எட்டும் வகையில் அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் தேர்தல் பிரிவு அலுவலர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.