நெல்லை-தென்காசி, தூத்துக்குடியில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன்என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை- 4 பேர் வீடுகளில் செல்போன்கள் பறிமுதல்


நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 4 பேரின் வீடுகளில் இருந்து செல்போன்கள் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 4 பேரின் வீடுகளில் இருந்து செல்போன்கள் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டன.

தேசிய புலனாய்வு முகமை

தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் பல்வேறு இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். கோவை கார் வெடிப்பு, சட்டவிரோத பணப்பரிவத்தனை உள்ளிட்டவை தொடர்பாக இந்த சோதனை நடந்ததாக தெரிகிறது.

இந்த சோதனையானது நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களிலும், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தலா 1 இடத்திலும் நடந்தது.

நெல்லை டவுன் கரிக்காத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அன்வருதீன் (வயது 35). இவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கட்டிட பணிக்கு தேவையான செங்கல், குண்டுகல், மணல், ஜல்லி போன்றவைகளை விற்பனை செய்து வருகிறார். இவருக்கு நெல்லை டவுனில் சொந்தமாக காம்ப்ளக்ஸ் உள்ளது.

அதிகாரிகள் சோதனை

அன்வருதீன் வீட்டிற்கு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் திடீரென்று வந்தனர். வீட்டில் இருந்த அவரிடம் வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு, சோதனை செய்தனர். மதியம் 1.30 மணி வரை சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. அப்போது, அன்வருதீனின் செல்போன், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் கைப்பற்றிச் சென்றனர். இந்த சோதனையின்போது அவரது வீட்டின் முன்பு துப்பாக்கிய ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

ஏா்வாடி

ஏர்வாடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ரஞ்சித் தலைமையிலான குழுவினர் எண்ணெய் வியாபாரியான கமால் (44) என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அவரிடமும் விசாரணை நடத்தினர். காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை 9.30 மணிக்கு நிறைவடைந்தது.

இதில் கமாலின் செல்போன், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி சென்றனர்.

பெண்ணிடம் விசாரணை

தென்காசியை சேர்ந்தவர் கார்த்திகேயன் என்ற அப்துல்லா. இவருடைய மனைவி ஹைருன் நிஷா. இவர்கள் தற்போது அச்சன்புதூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வீட்டிற்கு நேற்று அதிகாலை 5 மணி அளவில் தேசிய புலனாய்வு முகமை மும்பை பிரிவு அதிகாரி அகிலேஷ் தலைமையிலான குழுவினர் வந்தனர். அவர்கள் அங்கிருந்த ஹைருன் நிஷாவிடம் விசாரணை மேற்கொண்டு, வீட்டில் சோதனை செய்தனர். தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றார்கள்.

மதியம் 1 மணி வரை நடந்த இந்த சோதனை குறித்து போலீசார் கூறுகையில், கோவை கார் வெடிப்பு வழக்கில் குற்றவாளிகளின் ஒருவரான உமர் பாரூக்கின் மனைவியின் செல்போன் எண்ணிற்கு ஹைருன்நிஷா தொடர்ந்து பேசி வந்துள்ளார். மேலும் ஹைருன் நிஷா காயல்பட்டினத்தில் உள்ள அரபிக் கல்லூரியில் படித்தபோது, உமர் பாரூக்கின் மனைவியும் அங்கே படித்துள்ளார். அவர்கள் 2 பேரும் நண்பர்களாக பழகியுள்ளனர். அதன் அடிப்படையில் ஹைருன் நிஷா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

மடிக்கணினி பறிமுதல்

இதேேபால் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரி மொபிலேஷ் ஜக்கா தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள் கே.டி.எம். தெருவில் உள்ள மோகன்ராஜ் என்ற ஆரிஸ்கான் (36) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அங்கிருந்தவர்களை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. தொடர்ந்து துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

ேகாவை கார் வெடிப்பு சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காலை 5 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 3 மணிக்கு நிறைவு பெற்றது. அதாவது சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின் போது, வீட்டில் இருந்து 2 மடிக்கணினிகள், செல்போன், சிம்கார்டுகளை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.


Next Story