கையில் அரிவாளுடன்சமூக வலைதளத்தில்புகைப்படம், வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது
கையில் அரிவாளுடன் சமூக வலைதளத்தில்புகைப்படம், வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் தென்னம்பட்டியைச் சேர்ந்தவர் சுடலைமணி மகன் கணேசமூர்த்தி (வயது 21). இவர் 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைதளத்தில் சண்டியர் மூர்த்தி என்று பதிவிட்டும், அதில் அரிவாளுடன் கணேசமூர்த்தி இருப்பது போன்ற புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு இருந்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகேசுவரன் மேற்பார்வையில், கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் நேற்று கணேசமூர்த்தியை கைது செய்து, அவரிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
சட்டத்துக்கு புறம்பான செய்தி, புகைப்படம், வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.