குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன்  பெண்கள் சாலை மறியல்
x

வேதாரண்யம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலை மறியல்

வேதாரண்யம் அருகே பிராந்தியங்கரை ஊராட்சியில் பெரியகோவில்பத்து, கண்எறிந்தான்கட்டளை பகுதியில் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை.

குடிநீர் வராததால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், உடனடியாக குடிநீர் வழங்கக்கோரியும் அந்த பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த மறியலில் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வடக்கு ஒன்றியசெயலாளர் வெற்றியழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் முருகையன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரியாபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) மலர்கொடி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரியை முற்றுகையிட்டனர்

இதை தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வையாளர் வீரப்பன் சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது அவரை மறியலில் ஈடுபட்ட பெண்கள் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் டேங்கர் லாரி கொண்டு வரப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது.

2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மேலும் கொள்ளிடம் குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியலை கைவிட்டு பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் பிராந்தியங்கரை-திருத்துறைப்பூண்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story