புகையிலை பொருட்களுடன் பெண் உள்பட 2 பேர் கைது

கோவில்பட்டியில் புகையிலை பொருட்களுடன் பெண் உள்பட 2 பேரை போலீசாா் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், மற்றும் போலீசார் தெற்கு திட்டங்குளம் ஊர் எல்லையில் நேற்று வாகன சோதனை நடத்தினா். அப்போது எட்டயபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த கண்ணகட்டை கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (வயது 45) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் 3 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவர் தாப்பாத்தி கிராமத்திலுள்ள ராமசாமி மனைவி சண்முகத்தாயிடம் வாங்கி வந்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தாப்பாத்தி சென்று சண்முகத்தாய் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கிழக்கு போலீசார் வழக்குப்பதிவுசெய்து கடத்தலுக்கு பயன்படுத்திய வேல்முருகனின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும் வேல்முருகன், சண்முகத்தாய் ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.