முல்லைப்பெரியாற்றில் இருந்து அனுமதியின்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்கள் அகற்றம்
சின்னமனூர் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் இருந்து அனுமதியின்றி விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை அதிகாரிகள் அகற்றினர்.
விவசாயம்
சின்னமனூர் பகுதியில் நெல், தென்னை, வாழை, திராட்சை உள்ளிட்டவை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. முல்லைப்பெரியாற்றின் தண்ணீர் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாற்றில் இருந்து முத்துலாபுரம், வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி, சுக்காங்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு அனுமதி இன்றி குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்்தது.
அதன்பேரில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இன்று அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது முத்துலாபுரம் விலக்கு அருகே உள்ள சாலையில் பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி சோதனை மேற்கொண்டனர். அதில் அனுமதியின்றி குழாய்கள் பதித்து அதன் மூலம் விவசாய தோட்டங்களுக்கு தண்ணீர் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
குழாய்கள் அகற்றம்
இதையடுத்து அனுமதியின்றி தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றினர். பின்னர் தொடர்ந்து அனுமதி பெற்று வந்தால் மட்டுமே இப்பகுதியில் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்றும், அனுமதி பெறாமல் தண்ணீர் கொண்டு சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் அதிகாரிகள் கூறினர்.
அனுமதியின்றி தண்ணீர் கொண்டு சென்ற குழாய்களை திடீரென அதிகாரிகள் அகற்றியதால் விளைநிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல் வாடும் நிலை உள்ளது என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.