கேரளாவிற்கு அனுமதியின்றிமணல் அள்ளி சென்ற லாரி பறிமுதல்
கேரளாவிற்கு அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதியின்றி கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு சோதனை சாவடியில் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி புவியியாளர் பாண்டியராஜன் போலீசாருடன் இணைந்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் உள்ள அனுமதி சீட்டுகளை ஆய்வு செய்தார்.
அப்போது கேரள மாநில பதிவு எண் கொண்ட டிப்பர் லாரியை மறித்து ஆய்வு செய்தனர். அதில் அனுமதி சீட்டு இல்லாமல் எம்.சாண்ட் மணல் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி டிரைவரிடம் விசாரித்து கொண்டிருந்தபோது அவர் தப்பியோடி விட்டார். பின்னர் லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் கம்பம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உதவி புவியியாளர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் அதன் உரிமையாளரை தேடி வருகின்றனர்.