அனுமதியின்றிமணல் அள்ளிய டிப்பர் லாரிகள் பறிமுதல்2 பேர் கைது
அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அனுமதி சீட்டு இல்லாமல் கம்பம்மெட்டு மலைப்பாதை வழியாக கனிம வளங்கள் கடத்தப்படுவதாக தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம்மெட்டு மலைப்பாதையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் அதிகாரி பாண்டியராஜன், போலீசாருடன் இணைந்து தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கனிமவளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் உள்ள அனுமதி சீட்டுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது தமிழகம், கேரள மாநில பதிவு எண் கொண்ட 2 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில், தலா 6 யூனிட் எம்.சாண்ட் மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதற்கான அனுமதி சீட்டை கேட்டபோது லாரி டிரைவர்கள் இல்லையென்று கூறினர்.
இதையடுத்து 2 டிப்பர் லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதியின்றி மணல் அள்ளியதாக லாரி டிரைவர்களான உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜா (வயது 36), கூடலூரை சேர்ந்த அசோக் (31), லாரி உரிமையாளர்களான அனுமந்தன்பட்டியை சேர்ந்த தினகரன், கம்பத்தை சேர்ந்த காஜாமைதீன் ஆகியோர் மீது கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாண்டியராஜன் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் வழக்குப்பதிவு செய்து ஜேசுராஜா, அசோக் ஆகியோரை கைது செய்தார்.