மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் என்எல்சிக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு கலெக்டர் செல்லக்கூடாது கடலூரில் ஜிகேமணி பேட்டி


மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல்  என்எல்சிக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு கலெக்டர் செல்லக்கூடாது  கடலூரில் ஜிகேமணி பேட்டி
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் என்.எல்.சி.க்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு கலெக்டர் செல்லக்கூடாது என கடலூரில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

கடலூர்

பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அருள், வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகியோர் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியமிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். பின்னர் ஜி.கே.மணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் 299 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது.

99 சதவீதம் பேர் எதிர்ப்பு

மேலும் என்.எல்.சி.யில் இதுவரை ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடி நிகர லாபம் வந்துள்ளது. இதில் வடமாநிலங்களுக்காக ரூ.50 ஆயிரம் கோடி செலவழித்துள்ளது. ஆனால் கடலூர் மாவட்டத்திற்காக ஏதும் செய்யவில்லை. என்.எல்.சி. பகுதியில் ஒரு ஏக்கரில் 43,500 டன் நிலக்கரி உள்ளது. அதன் மதிப்பு ரூ.12 கோடியே 60 லட்சம் ஆகும். ஆனால் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தி விட்டு ரூ.23 லட்சம் தான் மக்களுக்கு கொடுக்கிறார்கள். இதுதொடர்பாக மக்களிடம் கருத்து கேட்ட போது ஒரு சதவீதம் பேர் ஏக்கருக்கு ரூ.1 கோடி மற்றும் நிரந்தர வேலை வேண்டும் என கேட்கின்றனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் நிலத்தை கொடுக்க மாட்டோம் என்றும், என்.எல்.சி. நிறுவனத்தை மூட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

நிலம் அளவீடு

அதனால் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், என்.எல்.சி.க்கு நிலத்தை கையகப்படுத்த அளவீடு செய்யும் பணிக்கு மாவட்ட கலெக்டர் செல்லக்கூடாது. மேலும் என்.எல்.சி.யால் இதுவரை எவ்வளவு நிலக்கரி எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது முன்னாள் மத்திய மந்திரிகள் ஏ.கே.மூர்த்தி, எம்.டி.சண்முகம், பசுமை தாயகம் மாநில தலைவர் அருள்ரத்தினம், மாநில அமைப்பு தலைவர் தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், செல்வ.மகேஷ், ரவிச்சந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.


Next Story