பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள வீடுகள்
திருத்துறைப்பூண்டியில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் வீடுகள் உள்ளன.
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் வீடுகள் உள்ளன.
வீடுகள்
திருத்துறைப்பூண்டி கீழசிங்களாந்தி கோட்டகம் பகுதியில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரியம் விழுப்புரம் கோட்டம் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 20 பேருக்கு வீடு கட்டித்தரப்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பணி தொடங்கியது.தற்போது இந்த வீடுகளின் மேல் பகுதியில் இருந்து தண்ணீர் வீட்டுக்குள் ஒழுகுகிறது. மேலும் சுவர் மற்றும் கீழ் பகுதியில் தளங்கள் போடவில்லை. சுவர் பகுதியில் இன்னும் பூச்சு வேலைகள் நடைபெறவில்லை. குறிப்பாக கழிவறை வசதிகள் செய்யப்படவில்லை.மின் இணைப்பு வழங்கப்படவில்லை.
மக்கள் பயன்படுத்த முடியாத நிலை
மேலும் வீடுகள் கட்டப்பட்ட இடங்களில் சாலைகள் போடவில்லை இதனால் மழைக்காலங்களில் அந்த வீடுகளுக்கு நடந்து செல்ல முடியாமல் முழங்கால் அளவிற்கு சேறும் சகதியுமாக இருக்கும் நிலை உள்ளது. மின்சாரம் இல்லாததால் இரவு நேரங்களில் பாம்பு தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வர வாய்ப்புள்ளது.இந்த வீடுகள் கட்டப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அந்த வீடுகளில் உள்ள குறைகளை சரி செய்து அங்கு அனைவரும் வசிக்க தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நடவடிக்கை
இது குறித்து வக்கீல் பி. அருள்செல்வம், கூறியதாவது:-திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதி மிகவும் பின்தங்கிய விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. திருத்துறைப்பூண்டி கீழசிங்களாந்தி கோட்டகம் பகுதியில் தமிழ்நாடு குடிசை பகுதி மாற்று வாரிய விழுப்புரம் கோட்டம் சார்பில் கட்டித் தரப்படும் என அறிவித்து கட்டப்பட்ட வீடுகள் பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளன.எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கட்டப்பட்ட வீடுகளின் உறுதி தன்மையை பரிசோதித்து வீடுகளை முழுமையாக கட்டி முடிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.