சாட்சி பாதுகாப்பு திட்ட கருத்தரங்கம்
சாட்சி பாதுகாப்பு திட்ட கருத்தரங்கம்
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவனம், சேவ் அறக்கட்டளை சார்பில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு கூட்ட அரங்கில் ஆள்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மேகலா மைதிலி கருத்துரை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசும்போது, 'ஆட்கடத்தல், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம், சாட்சி பாதுகாப்பு என மூன்றும், மனிதரின் அடிப்படை உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து பேசப்பட வேண்டிய முக்கிய காரணியாக உள்ளது. அரசு வக்கீல்கள், கூடுதல் அரசு வக்கீல்கள் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் பட்டியல் வக்கீல்கள் அனைவரும் இந்த நிகழ்வை பயன்படுத்தி கொள்ள வேண்டும்' என்றார்.
தமிழ்நாடு அலையன்ஸ் தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் பாலமுருகன், உலகெங்கும் நடக்கும் ஆட்கடத்தல் மூலம் மனித உரிமை மீறல், பொருளாதார சுரண்டல் என பெரும் வியாபாரம் நடப்பது குறித்து பேசினார். தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய சட்ட உதவி மைய வக்கீல் டேவிட் சுந்தர் சிங், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணம் மற்றும் சாட்சி பாதுகாப்பு திட்டம் குறித்து பேசினார். அரசு வக்கீல்கள் மற்றும் பட்டியல் வக்கீல்கள் 30-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.