நீதிமன்ற ஆவணங்களை திருட முயன்ற பெண் கைது
தேன்கனிக்கோட்டையில் நீதிமன்ற ஆவணங்களை திருட முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள எட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). இவர் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 7-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் முடிவுற்ற வழக்குகளின் நிலுவை பணிகளை செய்து கொண்டிருந்தார். வேலையில் ஏற்பட்ட அசதி காரணமாக அலுவலகத்திலேயே அன்று இரவு தூங்கி விட்டார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அலுவலக அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. இதுகுறித்து அவர் நீதிமன்ற தலைமை எழுத்தர் பிரகாசுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து அலுவலகத்தை திறந்து விட்டார்.
இது குறித்து தலைமை எழுத்தர் பிரகாஷ் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கர்நாடக மாநிலம் லிங்சூர் அருகே உள்ள ஜெட்டி காலனி பகுதியை சேர்ந்த உச்சப்பா மகள் சாந்தலாதேவி (25) என்பவர் நீதிமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக அறையை பூட்டி விட்டு ஆவணங்களை திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.