தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த பெண் கைது
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று மதியம் பெண் ஒருவர் கையில் பையுடன் வந்தார். அவரை நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீசார் பார்த்து சோதனை செய்தனர். அப்போது, அவர் பையில் பெட்ரோல் பாட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது. இதை பார்த்த போலீசார், அவரிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஸ்ரீமுஷ்ணம் அருகே சாவடிக்குப்பத்தை சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜகிளி (வயது 32) என்றும், அவரது பெற்றோர் சொத்து தராமல் அவரை அடித்து வருவதாகவும், இது பற்றி ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளிப்பதற்காக பெட்ரோல் பாட்டிலுடன் வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தீக்குளிக்க முயன்றதாக அவர் மீது கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.