ரூ.93¼ லட்சம் மோசடி செய்த பெண் கைது
புதுக்கோட்டை அருகே ரூ.93¼ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ரூ.10 லட்சம் கடன்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணனின் மனைவி வாசுகி (வயது 37). இவர் ஓட்டல் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த ரமேஷின் மனைவி உமா (40). இவர் தனது கணவரின் உடல் நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வாசுகியிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இந்த நிலையில் வாங்கிய கடனை அவர் திருப்பி செலுத்தாமல் இருந்தார். மேலும் இது குறித்து வாசுகி கடன் தொகையை திருப்பி கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இதேபோல் உமா கடந்த சில ஆண்டுகளாக சீட்டு நடத்தி வந்திருக்கிறார். அதாவது தீபாவளி சீட்டு, ஆண்டு சீட்டு உள்ளிட்டவை நடத்தியதில் 23 பேருக்கு ரூ.83 லட்சத்து 40 ஆயிரத்து 650-ஐ கொடுக்காமல் மோசடி செய்திருக்கிறார். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
பெண் கைது
இதையடுத்து, வாசுகியிடம் வாங்கிய கடன் மற்றும் ஏலம் சீட்டு பணம் தராதது என மொத்தம் ரூ.93 லட்சத்து 40 ஆயிரத்து 650 மோசடி செய்ததாக உமா மீது இன்ஸ்பெக்டர் பாரிமன்னன் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணை நடத்தினார். மேலும் உமாவை போலீசார் கைது செய்தனர்.