ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருடிய பெண் கைது
தக்கலை அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருடிய பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தக்கலை:
தக்கலை அருகே ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் பணம் திருடிய பெண்ணை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆசிரியை
திருவட்டார் அருகே உள்ள முளவிளையை சேர்ந்த ஜோஸ்குமார். இவருடைய மனைவி ஜெபபுனிதா (வயது40). இவர் திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம் போல் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். தொடர்ந்து பள்ளிக்கு செல்வதற்காக வெட்டுக்குழி பஸ் நிறுத்தத்தில் இருந்து குளச்சல் பஸ்சில் ஏறினார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அந்த பஸ் அழகியமண்டபத்தில் நின்ற போது பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர். அப்போது ஜெபபுனிதாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை யாரோ பறிக்க முயற்சி செய்வது போல் இருந்தது. உடனே அவர் திரும்பி பார்த்த போது ஒரு பெண் கழுத்தில் கை வைத்திருப்பதை பார்த்து சத்தம் போட்டார்.
உடனே அந்த பெண், ஜெபபுனிதாவின் தோள் பையில் இருந்த ரூ.600-யை திருடிவிட்டு தப்பி ஓடினார். உடனே அங்கு நின்ற பொதுமக்கள் அவரை துரத்தி பிடித்தனர்.
பல்வேறு திருட்டு வழக்குகள்
இதுகுறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப் -இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்துபாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் இருந்து அந்த பெண்ணை மீட்டு தக்கலை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த பெண் தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டியை சேர்ந்த பரமசிவம் மனைவி கருப்பாயி (40) என்பது தெரியவந்தது. தற்போது கணவன்-மனைவி இருவரும் மார்த்தாண்டம் ரெயில் நிலையத்தில் தங்கி இருந்தது தெரிய வருகிறது. மேலும் கருப்பாயி மீது இரணியல், களியக்காவிளை போலீஸ் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பாயியை கைது செய்தனர்.