நிலம் விற்பனை செய்வதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் கைது
நிலம் விற்பனை செய்வதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நிலம் விற்பனை செய்வதாக ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உதவி பேராசிரியை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி உமாமகேஸ்வரி. இவர் ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சின்னமனூர் அருகே அய்யனார்புரத்தை சேர்ந்த வைரம் என்ற ராசு (வயது 43) என்பவர் அறிமுகம் ஆனார். அவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், ஆண்டிப்பட்டியில் நிலம் விற்பனை செய்து வருவதாகவும் கூறினார்.
அதை நம்பிய உமா மகேஸ்வரி, அவருடைய தம்பி ஹரிசங்கர், ஹரிசங்கரின் மனைவி ஜெயந்திமாலா உள்பட 4 பேர் தலா ரூ.80 ஆயிரம் வீதம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை வைரத்திடம் கொடுத்தனர். அதற்கு அவர் நிலம் விற்பனை தொடர்பாக பட்டாக்களை கொடுத்தார். பின்னர் அந்த பட்டா போலியானது என்று உமா மகேஸ்வரிக்கு தெரியவந்தது. பின்னர், வைரம் திம்மரசநாயக்கனூரில் உள்ள 1 ஏக்கர் 92 சென்ட் நிலத்தை கொடுப்பதாக கூறினார்.
அந்த நிலம் வாங்குவதற்கு, தடையில்லா சான்று பெறுவது, பத்திரப்பதிவு செய்வது என பல காரணங்களை கூறி பணம் கேட்டதால் உமாமகேஸ்வரி மற்றும் அவருடைய உறவினர்கள் பல தவணையாக பணம் கொடுத்துள்ளார். மொத்தம் ரூ.70 லட்சத்தை வைரம், அவருடைய மனைவி ரேவதி மற்றும் சிலரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் போலியான பட்டா தயார் செய்தும், போலியான ஆவணங்கள் மூலமும் நிலம் விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்து விட்டது தெரியவந்தது.
பெண் கைது
இதுகுறித்து ஆண்டிப்பட்டி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் உமா மகேஸ்வரி மனு தாக்கல் செய்தார். அதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி இந்த சம்பவம் குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் கடந்த 2021-ம்ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த சம்பவம் குறித்து வைரம், அவருடைய மனைவி ரேவதி (37), மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆண்டிப்பட்டி துணை தாசில்தார் அப்துல்நசீம், சார்பதிவாளர் உஷாராணி உள்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில், வைரம் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரேவதியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.