பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
சித்தூரில் இருந்து மதுரைக்கு பஸ்சில் கடத்திய 10 கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
வேலூர்
வேலூர் மண்டல மத்திய கலால்பிரிவு இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் காட்பாடியை அடுத்த முத்தரசிக்குப்பம் சோதனைச்சாவடி அருகே கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சித்தூரில் இருந்து வேலூரை நோக்கி வந்த ஆந்திர மாநில பஸ்சை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
பஸ்சில், ஒரு பெண் பயணி வைத்திருந்த பையை பார்த்தபோது அதில் 5 கவர்களில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அந்த பெண் தேனி மாவட்டம் ஆன்டிப்பட்டியை சேர்ந்த லதா (வயது 44), என்பதும், சித்தூரில் இருந்து மதுரைக்கு கஞ்சா கடத்தி செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து லதாவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வேலூர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.