யானை தாக்கி பெண் பலி; கிராம மக்கள் சாலை மறியல்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலியானார். உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.
கூடலூர்
கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பலியானார். உடலை எடுக்க விடாமல் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தனர்.
பெண் பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பாரம் பகுதியை சேர்ந்தவர் மும்தாஜ் என்ற மாலு (வயது 38). இவர் நேற்று முன்தினம் மாலை தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அந்த பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை மும்தாஜை தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கூடலூர் போலீசார், ஓவேலி வனத்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே காட்டு யானை தாக்கி உயிரிழந்த மும்தாஜ் உடலை எடுக்கவிடாமல் கிராம மக்கள் நள்ளிரவில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் விரைந்து வந்து பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் முடிவு எட்டப்படவில்லை. மக்கள் வாழ்வதற்கு ஏற்ற பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சாலை மறியல்
இதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு உறுதியளிக்கப்பட்டது. இதை ஏற்று போராட் டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து மும்தாஜ் உடலை போலீசார், வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து வனத்துறையினர் டிரோன் பறக்கவிட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர். இந்த நிலையில் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் மும்தாஜ் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொன் ஜெயசீலன் எம்.எல்.ஏ. தலைமையில் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆஸ்பத்திரி முன்பு காலை 10.30 மணிக்கு திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ஆர்.டி.ஓ. சரவண கண்ணன், தாசில்தார் சித்தராஜ், போலீஸ் துணை சூப்பிரண்டு குமார் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் புதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்.
போராட்டம் நடத்தப்படும்
காட்டு யானைகளை விரட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு அரசு ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் நியமிக்கப்படும் என ஆர்.டி.ஓ. உறுதி அளித்தார். இதை ஏற்று 11.45 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பெண்ணின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் காட்டு யானை தாக்கி உயிரிழந்த மும்தாஜ் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் கட்டமாக வழங்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகளை விரட்ட உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த மாதம் 3-ந் தேதி கூடலூரில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றனர். ஏற்கனவே சமீபத்தில் காட்டு யானை தாக்கி டீக்கடைக்காரர் ஆனந்தகுமார் பலியானது குறிப்பிடத்தக்கது.