பெண்ணை கட்டையால் தாக்கி 6 பவுன் நகை பறிப்பு
விருத்தாசலத்தில் ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்து பெண்ணை கட்டையால் தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம், செப்.6-
விருத்தாசலத்தில் ஜெராக்ஸ் எடுப்பது போல் நடித்து பெண்ணை கட்டையால் தாக்கி 6 பவுன் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகை பறிப்பு
விருத்தாசலம் ஸ்டேட் வங்கி அருகில் வசிப்பவர் நரசியப்பா மனைவி கமலி (வயது 50). இவர், விருத்தாசலம் சக்தி நகரில் பேன்சி ஸ்டோர் மற்றும் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இன்று மதியம், 25 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்தார். அவர், பழைய பத்திரிகை ஒன்றை கமலியிடம் கொடுத்து 20 ஜெராக்ஸ் போட்டு தருமாறு கூறியுள்ளார்.
உடனே கமலி ஜெராக்ஸ் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபர், திடீரென கடைக்குள் புகுந்து உருட்டுக்கட்டையால் கமலியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலை தடுமாறிய கமலி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அந்த வாலிபர், கமலி கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா்.
போலீசார் விசாரணை
இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கமலியை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் வாலிபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகையை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.