குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை


குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் குடும்ப தகராறில் பெண்ணை அடித்துக்கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் குடும்ப தகராறில் பெண்ணை அடித்துக்கொலை செய்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.

குடும்ப தகராறு

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர் வயல் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 56). இவரது மனைவி உஷா(53). இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையில் கடந்த 19-ந் தேதி கூடலூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் மோகன், உஷா ஆகியோர் தனித்தனியாக சென்று கலந்து கொண்டனர். பின்னர் மறுநாள் காலையில் தனது மனைவியை காணவில்லை என்று அக்கம்பக்கத்தினரிடம் மோகன் கூறினார். இதை அறிந்ததும் உஷாவின் தம்பி சத்யன், கூடலூர் போலீஸ் நிலையத்தில் தனது அக்காளை காணவில்லை என்று புகார் செய்தார். அப்போது மோகனும் உடன் சென்றார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உஷாவை தேடி வந்தனர்.

அடித்துக்கொலை

இந்த நிலையில் மோகன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் நேற்று மாலையில் அவரது வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றனர். அப்போது வீட்டு சுவர்களில் சில இடங்களில் ரத்த கறைகள் இருப்பதை கண்டனர். இது தொடர்பாக மோகனிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்சினையில் ஆத்திரமடைந்து உஷாவை சுவர் மீது தள்ளிவிட்டதும், இதனால் தலையில் பலத்த காயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது உடலை நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் காரில் கொண்டு சென்று, பாடந்தொரை பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளத்தாக்கான புதரில் வீசி விட்டு, ஒன்றும் தெரியாதது போல மனைவியை காணவில்லை என்றுக்கூறி நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடல் மீட்பு

இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமார், இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் உள்ளிட்ட போலீசார் பாடந்தொரைக்கு சென்று உஷாவின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அழுகிய நிலையில் உஷாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து மோகனை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொன்றுவிட்டு கணவர் நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story