திருமணமான 5 மாதத்தில் பெண் தற்கொலை
பண்ருட்டியில் திருமணமான 5 மாதத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தாய் புகார் அளித்துள்ளார்.
2-வது திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் கரிக்கல்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் கவிதா (வயது 30). இவரது முதல் கணவர் கொரோனாவால் இறந்து விட்டார். இதையடுத்து கவிதா, கடந்த 5 மாதத்திற்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த கவிதா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியிலேயே கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சாவில் சந்தேகம்
இதுகுறித்து கவிதாவின் தாய் அம்சவேணி, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 5 மாதத்தில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.