கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை
திருவட்டார் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருவட்டார்:
திருவட்டார் அருகே பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
உடல்நலக்குறைவு
திருவட்டாரை அடுத்த மேக்காமண்டபம் குமரன்குடிவிளையை சேர்ந்தவர் ஸ்டாலின் பினோ (வயது 40), என்ஜினீயர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்களுடன் ஸ்டாலின் பினோவின் தாயார் ராஜபாயும் (67) வசித்து வந்தார். ராஜபாய் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலும், பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேருடன் தகராறு ஏற்பட்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், ராஜபாய் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஸ்டாலின் பினோவும், அவரது மனைவியும் வெளியே சென்றனர். வீட்டில் ராஜபாய் மட்டும் தனியாக இருந்தார்.
கடிதம் சிக்கியது
மாலையில் ஸ்டாலின் பினோ வீட்டுக்கு திரும்பினார். அப்போது, சமையல் அறையில் தாயார் ராஜபாய் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜபாயின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ராஜபாயின் அறையில் ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் பக்கத்து வீட்டை சேர்ந்த 2 பேர் தன்னை தாக்கியதாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தற்கொலை
மேலும், அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ராஜபாய் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்டாலின் பினோ திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.