திராவகம் குடித்து பெண் தற்கொலை
திராவகம் குடித்து பெண் தற்கொலை
குலசேகரம்:
குலசேகரம் அருகே உள்ள பொன்மனை இடைக்கட்டான் காலை பகுதியைச் சேர்ந்தவர் அஜெயகுமார் (வயது 63), ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி விஜயகுமாரி (59). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகுமாரி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக விஜயகுமாரி மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் காலையில் அஜெயகுமார் வழக்கம் போல் ரப்பர் தோட்டத்திற்கு பால் வெட்டும் பணிக்காக சென்று விட்டார். பின்னர் அவர், சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மனைவி வீட்டில் இல்லை. உடனே, அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது, அருகில் உள்ள தோட்டத்தில் மனைவி விஜயகுமாரி ரப்பர் பாலுக்கு பயன்படுத்தும் திராவகத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள்,ஏற்கனவே விஜயகுமாரி இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து குலசேகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.