பெண் விஷம் குடித்து தற்கொலை
அய்யர்மலையில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் பிணம்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அய்யர்மலையில் உள்ள ரெத்தினகிரீசுவரர் மலைக்கோவிலில் ரோப்கார் அமைக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் நேற்று கிடந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவர் விஷம் குடித்து இறந்து கிடப்பதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விசாரித்தபோது இறந்த பெண் குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராசு என்பவரின் மனைவி பழனியம்மாள் (வயது 50) என்பதும், ராசு கரூர் மாவட்டம் துக்காச்சி மூலக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் உதவியாளராக பணிபுரிவது தெரியவந்துள்ளது. ராசுவுக்கும், பழனியம்மாளுக்கும் கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
விஷம் குடித்தார்
கடந்த 2 ஆண்டுகளாக பழனியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாராம். இந்தநிலையில் ஆடி மாதம் குலதெய்வ வழிபாடு செய்வதற்காக கரூரில் இருந்து வளையப்பட்டிக்கு ராசு மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் ஆகியோர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். அன்று மாலை குளித்தலையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதாக பழனியம்மாள் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.இதன் பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லையாம். இந்தநிலையில் அய்யர்மலையில் உள்ள ரோப்பகார் கட்டிடத்தின் அருகே விஷமருந்து குடித்து இறந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராசு கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனியம்மாள் உடல் அருகே கிடந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.