போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்து பெண் தற்கொலை


போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 July 2023 12:15 AM IST (Updated: 26 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
கன்னியாகுமரி

திருவட்டார்:

சொத்து, நகை கேட்டு பெற்ற மகளே புகார் கொடுத்ததால் மனமுடைந்த தாயார் போலீஸ் நிலையம் முன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மகளுக்கு திருமணம்

திருவட்டார் அருகே உள்ள செட்டிச்சார்விளை கொல்லிக்கோட்டுவிளையை சேர்ந்தவர் சிம்சன். இவர் ஆந்திர மாநிலத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி லீமாராணி (வயது42). இவர்களுக்கு ஷாம்லன் (25) என்ற மகனும், ஷாம்லி (23) என்ற மகளும் உள்ளனர்.

கடந்த ஆண்டு மகள் ஷாம்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த பிராங்கோ என்பவருக்கும் திருமணம் நடந்தது. பிராங்கோ வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் திருமணமான சில நாட்களில் கணவன், மனைவி இருவரும் வெளிநாட்டுக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் திருமணத்தின் போது லீமாராணி தனது வீட்டை தான் இறந்த பிறகு மகளுக்கு கொடுப்பதாக உயில் எழுதி கொடுப்பதாக கூறியுள்ளார். அத்துடன் திருமணத்தின் போது ஷாம்லிக்கு கூறியபடி நகை போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ஷாம்லி தனது தாயார் மீது கோபமாக இருந்துள்ளார்.

போலீசில் புகார்

இந்தநிலையில் கடந்த வாரம் ஷாம்லி வெளிநாட்டில் இருந்து ெசாந்த ஊருக்கு வந்தார். ஆனால் அவர் தனது தாயார் வீட்டுக்கு செல்லவில்லை. அத்துடன் தனது தாய்-தந்தையிடம் பேசவும் இல்லை. இதையடுத்து கடந்த 23-ந் தேதி இரவு லீமாராணி தனது மகன் ஷாம்லனை அழைத்துக்கொண்டு மகள் ஷாம்லி வீட்டுக்கு சென்றார். அங்கு வீட்டின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவர்கள் வெளியே நின்று ஷாம்லி பெயரை சொல்லி அழைத்தனர். ஆனால் உள்ளிருந்து யாரும் வெளியே வரவில்லை. இதையடுத்து ஷாம்லன் வீட்டின் கதவை தட்டி அழைத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ஷாம்லி அவசர போலீஸ் எண் 100-க்கு போன் செய்து தன்னுடைய தாயாரும், சகோதரனும் தன்னை துன்புறுத்துவதாக புகார் செய்தார். உடனே திருவட்டார் போலீசார் ஷாம்லி வீட்டுக்கு வந்து அவரிடம் விசாரித்தனர். பின்னர் இது குடும்ப பிரச்சினை என்பதால் காலையில் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு தாய்-மகளிடம் கூறிச் சென்றனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில் 10 மணியளவில் ஷாம்லி தனது மாமியாருடன் திருவட்டார் போலீஸ் நிலையத்துக்கு வந்து ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது தாயார் லீமாராணி மற்றும் சகோதரன் ஷாம்லன் ஆகியோர் தனக்கு தருவதாக கூறிய நகை மற்றும் சொத்தை தரவில்லை என கூறியிருந்தார்.

விஷம் குடித்தார்

மகள் சொத்துக்காகவும், நகைக்காகவும் போலீசில் புகார் செய்ததை அறிந்த லீமாராணி மிகவும் மனமுடைந்தார். இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக லீமாராணி நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் திருவட்டார் போலீஸ் நிலையத்து புறப்பட்டார்.

போலீஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் சென்றவுடன் லீமாராணி தான் எடுத்து வந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதைகண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், லீமாராணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அதைக்கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து லீமாராணியின் தங்கை மேரி மெற்றில்டா திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் ெசய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜானகி, லீமாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சொத்து பிரச்சினையில் சொந்த மகளே புகார் செய்ததால் தாயார் போலீஸ் நிலையம் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story