தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டார்.
வேலூர் சலவன்பேட்டை குட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 37). இவர் திருவண்ணாமலை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பொற்செல்வி (31). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 9, 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கோபி தினமும் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்து பொற்செல்வியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாகவும், அதனால் அவர் மனவேதனையுடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோபி மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனால் விரக்தி அடைந்த பொற்செல்வி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கோபி, 2 மகள்கள் மற்றும் பொற்செல்வியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அதில், பொற்செல்வியை தற்கொலைக்கு தூண்டியது கோபி என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.