அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை


அரசு மருத்துவமனையில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

மகளின் பிரசவத்துக்காக வந்த பெண் பெரம்பலூர் அரசு மருத்துவமனை குளியலறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பலூர்

மகளின் பிரசவத்துக்காக வந்தவர்

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, அயன் தத்தனூர், காலனி தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அசலாம்பாள் (வயது 53). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. இதில் 2-வது மகள் லலிதாவை (25) பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூரை சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். ஏற்கனவே லலிதாவுக்கு முதல் பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பமான லலிதா கடந்த 25-ந்தேதி காலை பிரசவத்திற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் மதியமே லலிதாவுக்கு சுகப்பிரசவம் நடந்து 2-வதும் அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த லலிதாவை அவரது தாய் அசலாம்பாள் கூடவே இருந்து கவனித்து வந்தார்.

குளியலறையில்...

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாகவே அசலாம்பாள் தனக்குத் தானே பேசிக்கொண்டே சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் நடந்துள்ளார். அசலாம்பாளின் செயலை கவனித்து வந்த அவரது மருமகன் சிலம்பரசன் தனது மாமனார் ராமசாமியிடம் வந்து வீட்டிற்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 11.45 மணியளவில் மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள குளியலறைகளை சுத்தம் செய்வதற்காக மருத்துவமனை பெண் ஊழியர்கள் 2 பேர் சென்றனர்.

அப்போது ஒரு குளியலறையின் கதவு நீண்டநேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது குளியலறையில் துணிகளை தொங்கவிடும் கம்பியில் அசலாம்பாள் தான் உடுத்தியிருந்த சேலையால் தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கினார். அசலாம்பாளின் உடலை அவரது குடும்பத்தினர் பார்த்து கதறி அழுதனர்.

விபரீத முடிவா?

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அசலாம்பாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அசலாம்பாள் மனநலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மகளுக்கு 2-வதும் பெண் குழந்தை பிறந்ததால் மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு மருத்துவமனையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story