விவசாய கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி
குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு
ஆரணியை அடுத்த முள்ளண்டிரம் ஊராட்சிக்குட்பட்ட கே.கே. தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் காண்டீபன், கூலித்தொழிலாளி.
இவருக்கும், ராணிப்பேட்டை மாவட்டம் சின்னவெட்டியால்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி-பொன்னம்மாள் தம்பதியரின் மகள் சித்ரா (வயது 23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு பூஜிதா (2) என்ற மகள் உள்ளார்.
காண்டீபனுக்கு சரிவர வேலை இல்லாததால் குடும்பத்தை நடத்த சிரமப்பட்டு வந்தார். இதனால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது.
அதில் மனவேதனை அடைந்த சித்ரா நேற்று இரவு 7 மணியளவில் கிராமம் அருகே உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
வருவாய் கோட்டாட்சியர் விசாரணை
அங்கிருந்தவர்கள் ஓடி வந்து கிணற்றில் இருந்து சித்ராவை மீட்டு முள்ளண்டிரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சித்ரா உயிரிழந்து விட்டதாகக் கூறினர்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் சித்ராவின் தாய் பொன்னாம்மாள் கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ராவுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆவதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.