மகனுடன் பெண் தற்கொலை
கணவர் இறந்த ஒரு மாதத்தில் மகனுடன் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரும் தனித்தனியாக எழுதிய உருக்கமான கடிதங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளன.
சாத்தூர்,
கணவர் இறந்த ஒரு மாதத்தில் மகனுடன் பெண் தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் இருவரும் தனித்தனியாக எழுதிய உருக்கமான கடிதங்கள் போலீசாரிடம் சிக்கி உள்ளன.
வங்கி மேலாளர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சிதம்பரநகர் பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 65). தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி சுபா (58). இவர்களுக்கு முரளிராஜ்பாரதி (32) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இதில் மகள்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசிக்கிறார்கள். முரளிராஜ்பாரதி வெளிநாட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் கடந்த 30 நாட்களுக்கு முன்பு சிதம்பரம் மாரடைப்பால் இறந்தார். சிதம்பரத்தின் பிரிவை தாங்க முடியாமல் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகள் சோகத்தில் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் சிதம்பரத்தின் 30-வது நாள் துக்க தின நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து சிதம்பரத்தின் மகள்கள் மற்றும் உறவினர்கள் ஊருக்கு சென்று விட்டனர்.
தாய்-மகன் தற்ெகாலை
வீட்டில் தாயும், மகனும் மட்டும் இருந்தனர். பின்னர் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து சுபாவும், அவருடைய மகன் முரளிராஜ் பாரதியும் நேற்று முன்தினம் இரவு குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.
நேற்று காலையில் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்த போது சுபா, முரளிராஜ்பாரதி ஆகிய இருவரும் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தூர் நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
தாய்-மகன் உடல்களை பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாரும் நிர்பந்திக்கவில்லை
இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து, முரளிராஜ்பாரதி எழுதியதாக ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் எழுதி இருப்பதாவது:-
எங்களை மன்னித்து விடுங்கள். தந்தை இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அதனால் என் தந்தையை தேடிச்செல்கிறோம். எனது தந்தை இறந்ததால் என்னுடைய மொத்த வாழ்க்கையையும் இழந்துள்ளேன். அப்பாவுடன் இருந்த வாழ்க்கை எனக்கு மிக சிறப்பானதாக இருந்தது. நாங்கள் எங்கிருந்தாலும் உங்களை பார்த்துக்கொள்வோம். வாழ்த்துக்களுடன் செல்கிறோம், என குறிப்பிடப்பட்டு உள்ளது.
கணவருக்கு சேவை
அதேபோல சுபா எழுதிய கடித்ததில், "எங்களை மன்னித்து விடுங்கள். நான் எனது கணவர் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. ஆதலால் எனது கணவரை தேடி செல்கிறேன். எங்களை யாரும் தற்கொலை செய்து கொள்வதற்கு நிர்ப்பந்திக்கவில்லை. எனது கணவருடன் இருந்த வாழ்க்கையை என்னால் மறக்க முடியவில்லை. மேலும் அவர் சென்ற இடத்திற்கு சென்று அவருக்கு சேவை செய்யவே நான் செல்கிறேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடிதங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவர் இறந்த ஒரு மாதத்தில் மகனுடன் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.