கணவரால் வெட்டப்பட்ட பெண் சாவு


இரணியில் அருகே குடும்ப தகராறில் கணவரால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியில் அருகே குடும்ப தகராறில் கணவரால் வெட்டப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்து வேறுபாடு

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோடு பகுதிைய சேர்ந்தவர் மேனகா (வயது 39). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ்லின் பாபு என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். திருமணம் ஆன 3-வது ஆண்டிலேயே ஜோஸ்லின்பாபு இறந்து விட்டார்.

இதையடுத்து மேனகா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெயபால் (45) என்ற ஓட்டல் தொழிலாளியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கணவரை பிரிந்த மேனகா தனது மகள், மகனுடன் குருந்தன்கோட்டில் வசித்து வருகிறார்.

அரிவாளால் வெட்டினார்

இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி குருந்தன்கோட்டில் ஆலயத்துக்கு சென்று வந்த மேனகா மற்றும் குழந்தைகளை ஜெயபால் கிராம ஊராட்சி சேவை மையம் முன்பு தடுத்து நிறுத்தினார். அப்போது, எனக்கு பிறந்த மகனை என்னுடன் அனுப்பு என்று கூறி ஜெயபால் தகராறு செய்துள்ளார். ஆனால், மகனை கொடுக்க முடியாது என மேனகா மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெயபால் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மேனகாவை சரமாரியாக வெட்டினார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத ஜெயபால் 12 வயது மகளையும் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த 2 பேரமு் அலறினார்கள். அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் ஜெயபால் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பெண் சாவு

பின்னர், படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மேனகா, அவரது மகள் ஆகிய 2 பேரையும் அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயபாலை தேடி வந்தனர்

இந்தநிலையில் நேற்று மதியம் மேகனா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது மகளுக்கு தொடர்ந்து சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலை வழக்காக மாற்றம்

இதையடுத்து இரணியல் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி ஜெயபாலை தீவிரமாக தேடி வருகிறார்கள்.


Next Story