அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்துடன் பெண் தர்ணா


அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்துடன் பெண் தர்ணா
x
தினத்தந்தி 25 Jun 2023 12:15 AM IST (Updated: 25 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் குடலுடன், கர்ப்பப்பையை சேர்த்து தையல் போட்ட சம்பவம் தொடர்பாக அரசு ஆஸ்பத்திரியில் குடும்பத்துடன் பெண் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கடலூர்

கடலூர்

பிரசவம்

பண்ருட்டி அருகே உள்ள சிறுவத்தூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பத்மாவதி(வயது 25). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு கடந்த 19.9.2022 அன்று அறுவை சிகிச்சை மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குடல் பகுதியையும், கர்ப்பப்பை பகுதியையும் சேர்த்து வைத்து தையல் போட்டதாக தெரிகிறது. இதையடுத்து பத்மாவதிக்கு, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பின்னர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பியும் அவருக்கு வயிறு வலி சரியாகவில்லை என தெரிகிறது. இதனால் தனக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கலெக்டர் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதும், அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பெட்ரோல் கேனுடன் வந்த பெண்

இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தியும், எவ்வித அறிக்கையையும் சமர்ப்பிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பத்மாவதி கடந்த பிப்ரவரி மாதம் தனது உறவினர்களுடன் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தும், கண்டுகொள்ளவில்லை. இதனால் பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் கலெக்டரிடம் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் நேற்று காலை வெங்கடேசன், பத்மாவதி மற்றும் அவரது குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பெட்ரோல் கேனுடன் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். உடனே அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த மருத்துவ பரிசோதனை சீட்டுகளை தரையில் கொட்டி, ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடல் உறுப்புகள் தானம்

அந்த சமயத்தில் அங்கு வந்த ஆஸ்பத்திரியின் கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள், தவறான அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்மாவதிக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இல்லையெனில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்கிறோம், எடுத்துக் கொள்ளுங்கள் என்றனர். அதற்கு கண்காணிப்பாளர் அசோக் பாஸ்கர், பத்மாவதிக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story